எஸ்.தாணு, எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது "கள்ளத்துப்பாக்கி" தயாரிப்பாளர் கொலை மிரட்டல் புகார்

|

Kallathuppakki Producer Files Life Threat Complaint

சென்னை: தயாரிப்பாளர் சங்க தலைமைப் பொறுப்பில் இருக்கும் கலைப்புலி தாணு, எஸ்ஏ சந்திரசேகரன் ஆகியோர் மீது கள்ளத்துப்பாக்கி படத் தயாரிப்பாளர் ரவி தேவன் கொலைமிரட்டல் புகார் அளித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கம், கிருஷ்ணா நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் ரவி என்ற ரவிதேவன் (வயது 39). இவர் நேற்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், "நான், கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் சினிமா படம் ஒன்றை தயாரித்து வருகிறேன். இந்த படம் வெளிவரும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் துப்பாக்கி என்ற பெயரில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ஒன்றை, எஸ்.தாணு தயாரித்து வருகிறார். துப்பாக்கி என்ற தலைப்பை பயன்படுத்த, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நான் தடை ஆணை பெற்றுள்ளேன்.

இதனால் ஆத்திரம் அடைந்துள்ள சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரும், பொருளாளர் எஸ்.தாணுவும், அடியாட்களை ஏவிவிட்டு, என்னை மிரட்டுகிறார்கள். செல்போன் மூலமும் எனக்கு கொலை மிரட்டல்கள் வருகிறது. எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு கொடுப்பதோடு, சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்குமாறு வேண்டுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment