காரை மோதி இன்ஸ்பெக்டரை படுகாயப்படுத்திய நடிகர் சுரேஷ் கைது

|

Actor Arrested Injuring 4 An Accident
சென்னை: சென்னையில் நடந்த சாலை விபத்தில் இன்ஸ்பெக்டரும், மேலும் மூ்வரும் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக தேனி மாவட்டம் என்ற படத்தில் நடித்தவரான நடிகர் சுரேஷ் என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஈவேரா சாலையில், கீழ்ப்பாக்கம் பகுதியில் ஒரு கார் இன்று காலை 8 மணியளவில் வேகமாக வந்தது. அப்போது திடீரென அது தாறுமாறாக ஓடி சாலையில் போய்க் கொண்டிருந்த ஒரு பைக்கில் மோதியது. இதில் பைக்கை ஓட்டிச் சென்ற இன்ஸ்பெக்டர் ஆனந்தன் கீழே தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவருடன் அமர்ந்து வந்த நண்பர் கோவர்த்தனும் காயமடைந்தார்.

பைக்கில் மோதி விபத்துக்குள்ளான கார் சாலையில் போய்க் கொண்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் மீதும் மோதியது. இதில் ஆட்டோ டிரைவர்கள் பிரபுதாஸ், முனிவேலு ஆகியோர் காயமடைந்தனர்.

இதனால் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்தனர். காரை ஓட்டி வந்தவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் நடிகர் சுரேஷ் என்பதும், தேனி மாவட்டம் என்ற படத்தில் நடித்துள்ளார் என்றும் தெரிய வந்தது. அவர் சில டிவி தொடர்களிலும் நடித்து வருகிறாராம்.

சுரேஷைக் கைது செய்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
 

Post a Comment