தாண்டவம்: ஒரே தலைப்பை இரு நிறுவனங்களுக்கும் கொடுத்ததால் பிரச்சினை - வழக்கு!

|

Thaandavbam Title Clash Producer Files Case   

சென்னை: நடிகர் விக்ரம் நடித்துள்ள `தாண்டவம்' படத்தின் தலைப்புக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

சென்னை 16-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில், ஸ்டார் நைன் மீடியாஸ் உரிமையாளர் எஸ்.விஜய் தாக்கல் செய்துள்ள மனுவில், "தாண்டவம்' என்ற தலைப்பில் புதுமுக நடிகர்கள் நடிக்கும் சினிமா படத்தை தயாரித்து வருகிறேன்.

இந்த படத்தின் தலைப்பை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலில் 2010 டிசம்பர் மாதம் பதிவு செய்துள்ளேன். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணி பிரசாத் பிலிம் லேப்பில் நடந்து வருகிறது. இந்த படத்தை தயாரிக்க பணம் தேவைப்பட்டதால், இந்த படத்தை ஹேப்பி மீடியா நிறுவனத்துக்கு எழுதிக் கொடுத்துள்ளேன்.

இந்த நிலையில், யு.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம், நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தை 'தாண்டவம்' என்ற தலைப்பில் தயாரிக்கிறது. இதுசம்பந்தமாக பத்திரிகைகளில் விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, யு.டி.வி. மோசன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலிடம் 2011 அக்டோபர் மாதம் புகார் செய்தோம்.

இதையடுத்து இருதரப்பினரிடம் தயாரிப்பாளர் கவுன்சிலில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், ஆர்.சங்கரின் `தாண்டவம்' என்ற தலைப்பை நாங்களும், விக்ரமின் `தாண்டவம்' அல்லது `சிவதாண்டவம்' என்ற தலைப்பை யு.டி.வி. மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் பயன்படுத்தவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இதுவரை ரூ.1 கோடியே 50 லட்சம் வரை செலவு செய்து, படத்தின் 90 சதவீத பணிகளை முடித்துவிட்டோம். இந்த சூழ்நிலையில், 1.8.2012 அன்று யு.டி.வி. மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளது. அந்த விளம்பரத்தில், `தாண்டவம்' படத்தின் டிரைய்லர் மற்றும் ஆடியோ கேசட் வெளியீடும் நிகழ்ச்சி ஆகஸ்ட் 15-ந் தேதி நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

`தாண்டவம்' படத்தின் தலைப்பை யு.டி.வி. மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் பயன்படுத்தினால், எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். எனவே `தாண்டவம்' படத்தின் தலைப்பை பயன்படுத்தவும், அந்த தலைப்பில் படத்தை வெளியிடுவதற்கும் யு.டி.வி. மோசன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று விசாரணை

இந்த மனு நீதிபதி இந்திராணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, யு.டி.வி. மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் வக்கீல் சிவம் சிவானந்தராஜ் ஆஜராகி, வழக்கு விசாரணை 3 வாரத்துக்கு தள்ளிவைக்கவேண்டும் என்று வாதம் செய்தார். இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.கோதண்டபாணி எதிர்ப்பு தெரிவித்து வாதம் செய்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கை 14-ந் தேதிக்கு (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அப்போது யு.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

ஒரே தலைப்பை இருவருக்கும் கொடுத்த சங்கம்

இதுகுறித்து கருத்து தெரிவித்த யுடிவி நிறுவன தென்னிந்திய நிர்வாகி தனஞ்செயன், "ஒரே தலைப்பை இருவருக்கும் கொடுத்ததால் வந்த பிரச்சினை இது. தவறு எங்களுடையதல்ல. பிரச்சினை நல்லவிதமாக முடியும் என நம்புகிறோம்," என்றார்.

 

Post a Comment