எஸ்.சி.விக்கு போட்டியாக களமிறங்கும் ரைட் டிவி!

|

Right Tv The New Competitor Scv

சன் டிவியின் மாஸ்டர் கேபிள் ஆபரேட்டர் நிறுவனமான எஸ்.சி.வி தான் தமிழகத்தில் கேபிள் தொழிலையே கட்டுக்குள் வைத்துள்ளது. தற்போது எஸ்.சி.வியின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் களமிறங்கியுள்ளது ஒரு புதிய நெட் ஒர்க்!

திமுக ஆட்சிக் காலத்தில் சன் குழுமத்திற்கும் முதல்வர் கருணாநிதி குடும்பத்திற்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் அரசு கேபிள் டிவி உருவாக்கப்பட்டது. கலைஞர் டிவியும் உருவானது. பின்னர் கண்கள் பணிக்க இதயம் இனித்து இருவர் குடும்பமும் ஒன்று சேர்ந்தன. இதன்பிறகு அரசு கேபிள் டிவி கிடப்பில் தள்ளப்பட்டது.

இந்நிலையில் சென்னையின் ஆவடி மார்கத்தில் கேபிள் டிவி நெட்வொர்க்கில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த ஜாக் டிவி நெட்வொர்க், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி அழகிரியின் பின்பலத்துடன் சென்னையிலும் தங்கள் கேபிள் டிவி நெட்வொர்க் சேவையை பதித்தது.

இன்னொரு பக்கம் சென்னை அண்ணா நகர் மார்கத்தில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களில் சுமார் இருபது பேர் கொண்ட கூட்டணி, பல ஆண்டுகளாக சென்னை திருமங்கலத்தில் மத்திய அரசின் எம்.எஸ்.ஒ லைசன்ஸ் பெற்று "ரைட் டிவி" என்னும் கேபிள் டிவி நெட்வொர்க்கை ஆரம்பித்தனர்.

ஆனால், எஸ்.சி.வியை மீறி அவர்களால் தனித்து கேபிள் டிவி நெட்வொர்க்கை நடத்த முடியாததால், எஸ்.சி.வி உடன் கூட்டு சேர்ந்து அண்ணா நகர் மார்க்கத்தில் தங்கள் கேபிள் டிவி சேவையை வழங்கி வந்தனர்!.

தற்போது ட்ராய் ஒழுங்குமுறை அமைப்பின் புதிய டிஜிட்டல் ஒளிபரப்பு சட்டத்தின் படி, எஸ்.சி.வியின் கட்டணம் மிக அதிகம் உயர்ந்துள்ளதாலும், லோக்கல் கேபிள் ஆபரேடர்களுக்கு இந்தக் கட்டணம் கட்டுப்படி ஆகாதா காரணத்தினாலும் ரைட் டிவி பங்குதாரர்கள் தனிச்சையாக முகப்பேர் எரி திட்டத்தில் உள்ள தொழிற்பேட்டையில் ஒரு அச்சக கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அதில் புதிய டிஷ் ஆன்டனாக்களை நிறுவி தனியே சேவையைத் தொடங்க இருக்கிறார்கள்.

ரைட் டிவியின் இந்த புதிய கேபிள் டிவி நெட்வொர்க் நவம்பர் மாதத்தில் தங்கள் சேவையை ஆரம்பிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ரைட் டிவி ஆரம்பத்தில் குறைந்த கட்டணத்தில் சுமார் 500 இலவச சேனல்களை டிஜிட்டல் வடிவில் ஒளிபரப்ப இருக்கிறதாம்!.

ரைட் டிவியின் இந்த முயற்சி, இதை போல் ஆரம்பிக்க உள்ள மற்ற கேபிள் டிவி எம்.எஸ்.ஒக்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இனி சென்னையில் எஸ்.சி.வி, ஜாக் டிவி, அரசு கேபிள் மற்றும் ரைட் டிவி என நான்கு கேபிள் நெட்வொர்க்குகள் செயல்பட உள்ளன.

இந்தப் போட்டி ஒருவர் கேபிள்களை மற்றவர் வெட்டிக் கொள்ளாமல், நுகர்வோருக்கு சாதகமாக சேவைகளை வழங்கவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.


 

Post a Comment