ஹைதராபாத்: தெலுங்கு படமான ரிபெல்லின் தயாரிப்பாளர்களுக்கு இயக்குனர்-நடிகர் லாரன்ஸ் ரூ.2.5 கோடி நஷ்டஈடு வழங்க தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் தெலுங்கில் பிரபாஸ் மற்றும் தமன்னாவை வைத்து ரிபெல் என்ற படத்தை எடுத்தார். லாரன்ஸின் இந்த படத்தால் தாங்கள் நஷ்டம் அடைந்ததாக பகவான், புல்லாராவ் ஆகிய 2 தயாரிப்பாளர்கள் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தனர்.
தங்கள் புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
ரிபெல் படத்தை ரூ.22.5 கோடி பட்ஜெட்டில் எடுத்து தர லாரன்சுடன் ஒப்பந்தம் போட்டோம். ஆனால் அவர் நிர்ணயித்ததைவிட படத்துக்கு அதிகம் செலவு வைத்துவிட்டார். இதனால் எங்களுக்கு ரூ.5.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த பணத்தை லாரன்ஸ் திருப்பி தரவேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் இந்த விவகாரம் குறித்து விசாரிகக் 20 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்த குழு நடத்திய விசாரணையில் லாரன்ஸால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது உறுதியானது.
இதையடுத்து லாரன்ஸ் பகவான் மற்றும் புல்லாராவுக்கு ரூ.2.5 கோடி நஷ்டஈடு வழங்க தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட்டது. மேலும் அவர் இந்த தொகையை 30 நாட்களுக்குள் கொடுக்காவிட்டால் மொத்த நஷ்டத் தொகையான ரூ.5.5 கோடியையும் அவர் அளிக்க வேண்டும் என்று எச்சரி்க்கை விடுத்துள்ளது.
Post a Comment