டெல்லி: மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், திரைப்படம் ஆகிறது. பாலிவுட் இயக்குநர் ஹேமந்த் மதுகர் ‘டெல்லி மாஃபியா' என்ற பெயரில் இதனை இயக்குகிறார்.
டெல்லியில், ஓடும் பேருந்தில் 23 வயது மருத்துவ மாணவி கடந்த டிசம்பர் 14ம் தேதி 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பலாத்காரம் செய்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது. இந்த கோரிக்கையுடன் டெல்லியில், கடந்த 5 நாட்களாக மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தி திரைப்படமாகிறது
நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம், ‘டெல்லி மாஃபியா' என்ற பெயரில் திரைப்படம் ஆகிறது. ‘மும்பை 125 கிலோ மீட்டர்' என்ற இந்தி படத்தை இயக்கிய ஹேமந்த் மதுகர், இந்த படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.
இதுபற்றி கருத்து கூறியுள்ள ஹேமந்த் மதுகர்,‘‘இது மிகவும் வெட்கக்கேடான சம்பவம். டெல்லியில் நம் சகோதரிகளும், மகள்களும் தினமும் படும் கஷ்டங்களையும் சிரமங்களையும் படத்தில் காட்டப் போகிறேன்.
பலாத்கார சம்பவத்தில் நடந்த உண்மைகளை அப்படியே சொல்லப் போகிறேன். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்துள்ளன. அதையும் படத்தில் காட்ட இருக்கிறேன்.
எவ்வளவு சீக்கிரம் தொடங்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படும்.'' இவ்வாறு டைரக்டர் ஹேமந்த் மதுகர் கூறினார்.
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன. மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை திரைப்படமாக எடுக்கும் போது பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அமைய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment