சென்னை: மத்திய அரசின் 12.36 சதவீத சேவை வரியைக் கண்டித்து மொத்த தமிழ் சினிமா உலகமும் வரும் ஜனவரி 7-ம் தேதி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளன.
திரையுலகுக்கு 12.36 சதவீதம் மத்திய அரசு சேவை வரி விதித்துள்ளது. இதனை கடந்த ஆண்டு ஜனவரி மாதமே அறிவித்துவிட்டது. இதனை எதிர்த்து கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தமிழ் திரையுலகில் ஒரு ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது.
ஆனால் அதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. அறிவித்தபடி கடந்த ஜூலை 1-ம் தேதியிலிருந்து இந்த சேவை வரி அமலுக்கு வந்துவிட்டது.
இந்த நிலையில் இந்த வரி உயர்வை கண்டித்து மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளன திரையுலகின் பல்வேறு அமைப்புகளும்.
நடிகர் சங்கம் தலைவர் சரத்குமார் கூறுகையில், "இந்த சேவை வரி விதிப்பு 6 மாதங்களுக்கு முன்பே அமலுக்கு வந்தாலும், இப்போது போராட்டம் நடத்துவது கவனத்தை ஈர்க்கும். காரணம் இது பட்ஜெட் நேரம் வேறு.
எனவே, வரும் 7-ம் தேதி முழு அளவில் ஸ்ட்ரைக் மேற்கொள்ளப் போகிறோம்," என்றார்.
ஆனால் தியேட்டர்களை அன்றைக்கு மூட மாட்டோம் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன் செயலர் பன்னீர் செல்வம் கூறுகையில், "சேவை வரி விதிப்பு தியேட்டர்களுக்கு இல்லை. எனவே நாங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கமாட்டோம்," என்றார்.
Post a Comment