வேலூர்: உலக நாயகன் கமல் ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளதாக விக்ரம் தெரிவித்துள்ளார். மேலும் தான் 8ம் வகுப்பு படிக்கையில் ஆசிரியை ஒருவரை காதலித்ததாக அவர் கூறினார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்த ரிவேரா 2010 என்னும் சர்வதேச கலாச்சார மற்றும் விளையாட்டு விழாவின் நிறைவு விழாவில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டார். போட்டியில் வென்ற மாணவ-மாணிவயருக்கு பரிசுகள் வழங்கி அவர் பேசுகையில்,
விஜடி நிகழ்ச்சிக்கு நான் வருவதற்கு கடந்த 3 ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்டது. தற்போது எனது மனைவியின் வற்புறுத்தலின்பேரில் தான் வந்தேன். வந்த பிறகு தான் இதை இத்தனை ஆண்டுகளாக மிஸ் பண்ணிவிட்டோமே என்று தோன்றியது. இங்கு படிக்கும் மாணவ-மாணவியர் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இங்கு படிப்புக்குரிய அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது பெருமையாக உள்ளது என்றார்.
அதன் பிறகு அவர் மாணவ-மாணவியர் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
கேள்வி: உங்கள் கல்லூரி வாழ்க்கை பற்றி...
பதில்: சுத்த போர். ஆண்கள் பள்ளியில் படித்தேன். கல்லூரியில் லயோலா கல்லூரியில் சேர்த்துவிட்டனர். அங்கும் பெண்கள் இல்லை.
கேள்வி: உங்களுக்கு பெண் தோழிகள் இருக்கிறார்களா?
பதில்: அதைக் கூறினால் பிரச்சனையாகிவிடும். எனது உறவினர் ஒருவர் இங்கு படிக்கிறார். நான் ஏதாவது கூறினால் அதை அவர் என் மனைவியிடம் தெரிவித்துவிடுவார். நான் 8ம் வகுப்பு படிக்கையில் ஆசிரியை ஒருவரை காதலித்தேன். ஆனால் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துவிட்டது.
கேள்வி: உங்களுக்கு எந்த நடிகை பிடிக்கும்?
பதில்: பெயரைக் குறிப்பிட்டு கூறினால் பிரச்சனை ஏற்படும் கேள்வி கேட்ட மாணவரைப் பார்த்து உங்களுக்கு எந்த நடிகையை பிடிக்கும் என்று கேட்டார். அதற்கு அந்த மாணவர் நமீதா என்றார். நமீதாவை எனக்கும் பிடிக்கும். அவர் என்னை கோஹினூர் வைரம் என்று கூறியுள்ளார் என்றார் விக்ரம்.
கேள்வி: எந்த ஹீரோவுடன் சேர்ந்து நடிக்க உங்களுக்கு ஆசை?
பதில்: டபுள் ஆக்ஷன் ஹீரோவாகவும், என் மகனுடன் நடிக்க ஆசையாக உள்ளது. மேலும் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா, கார்த்தியுடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது. என்னது தப்பிச்சிட்டேனா? கமல் ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை என்றார்.
Post a Comment