கேயார் எந்த பதவிக்கு போட்டியிட்டாலும் எதிர்த்து நிற்பேன் - எஸ்ஏ சந்திரசேகரன் சவால்

|

Sa Chandrasekaran Challenged Keyar

சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கேயார் எந்த பதவிக்கு போட்டியிட்டாலும் நான் எதிர்த்துப் போட்டியிடுவேன் என்று எஸ் ஏ சந்திரசேகரன் கூறினார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையில் ஒரு அணியாகவும், கேயார் தலைமையில் இன்னொரு அணியாகவும் பிளவுபட்டு இருக்கிறது. ‘‘நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்ததால், எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்'' என்று கேயார் நேற்று முன்தினம் பேட்டி அளித்தார்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறுகையில், "நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கேயார் சில தகவல்களை சொல்லியிருக்கிறார். எங்கள் நிர்வாகத்தின் மீது நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 204 ஓட்டுகளும், எதிராக 10 ஓட்டுகளும் கிடைத்ததாக சொல்லியிருக்கிறார். அன்று நடந்த ஓட்டெடுப்பில், எங்கள் அணியினர் யாரும் வாக்களிக்கவில்லை. கடந்த தேர்தலில், சுமார் 700 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதில், சுமார் 400 பேர் எங்களை ஆதரித்தும், சுமார் 300 பேர் எங்களை எதிர்த்தும் வாக்களித்தனர். அந்த 300 பேர்களும் இப்போது 215 பேர்களாக குறைந்து விட்டார்கள்.

'வேலை பார்க்கவே விடவில்லை!'

ஒரு தேர்தலிலே வெற்றி பெற்றவர்கள் 2 ஆண்டுகள் சங்கத்தின் நிர்வாகத்தில் இருந்து பணிபுரியலாம் என்பதுதான் சங்கத்தின் விதிமுறை. எங்களை 2 ஆண்டுகள் அல்ல, 2 மாதங்கள் கூட நிம்மதியாக பணி செய்யவிடாமல் இடையூறுகளையும், பிரச்சினைகளையும் ஏற்படுத்தி சங்கத்தின் ஒற்றுமையை குலைக்கிறார்கள். தயாரிப்பாளர்களின் நலனுக்காக எந்த ஒரு முடிவையும் எடுக்கவிடாமல் தடை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மாதத்தில் தேர்தல்

இன்னும் ஒரு மாத காலத்துக்குள் முறைப்படியான பொதுக்குழு கூட்டப்படும். அதில், முன்கூட்டியே தேர்தல் நடத்துவதை பற்றி முடிவு செய்யப்படும். மீண்டும் தேர்தலில் எந்த பதவிக்கும் போட்டியிடக்கூடாது என்று நேற்று வரை முடிவு செய்திருந்தேன். ஆனால் இன்று, அடுத்த தேர்தலில் கேயார் எந்த பதவிக்கு நிற்கிறாரோ அதே பதவிக்கு நானும் போட்டியிடுவேன். நான் மட்டுமல்ல, எங்கள் அணியே போட்டியிடும்," என்றார்.

 

Post a Comment