மதுரை: விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சிலும் வெளியிடுவதால், அட்வான்ஸ் அடிப்படையில் படத்தை திரையரங்குகளுக்குத் தரும் கமல் ஹாஸனை ஏமாற்றும் விதத்தில், பல பகுதிகளில் விஸ்வரூபத்தை மினிமம் கேரன்டி அடிப்படையில் சில விநியோகஸ்தர்கள் வெளியிடுகின்றனர்.
இதனால் கமல் முன்வைத்த நேர்மையான வர்த்தகம் மோசடிக்குள்ளாகியுள்ளது.
விஸ்வரூபம் படத்தின் வர்த்தகம் டிடிஎச் மற்றும் இஸ்லாமியர் பிரச்சினைகளைச் சந்திக்கும் வரை ரொம்ப சாதாரணமாகவே இருந்தது.
ஆனால் தொடர்ந்து பிரச்சினைகள், தடைகள் வந்ததில் படத்தின் வர்த்தகமும் எகிறிவிட்டது. முதல் 200 தியேட்டர்களாவது கிடைக்குமா என்ற நிலை போய், இப்போது 500 அரங்குகளில் படத்தை வெளியிடுகின்றனர். இன்னும் அதிகமான அரங்குகளில் கூட திரையிடப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த எதிர்ப்பார்ப்பை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் விநியோகஸ்தர்கள்.
இந்தப் படம் டிடிஎச்சிலும் வெளியாகப் போவதால், தியேட்டர்கள் யாரும் பாதிப்படைந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தியேட்டர்களிடம் எம்ஜி என்ற பெயரில் பெரும் தொகையைப் பெறாமல், குறைந்தபட்ச அட்வான்ஸ் மட்டும் பெற்றுக் கொண்டு படத்தை வெளியிடக் கொடுத்தார் கமல்ஹாஸன்.
இப்போது தியேட்டர்கள் இந்தப் படத்தை வெளியிட ஏகப்பட்ட ஆர்வம் காட்டுவதால், அந்த டிமாண்டை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர் விநியோகஸ்தர்கள்.
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இந்தப் படத்தை எம்ஜி எனும் மினிமம் கேரன்டி முறையில் விற்பனை செய்துள்ளார்களாம். இதனை ஒப்பந்தமாக எழுதிக் கையெழுத்திட்டால் மாட்டிக் கொள்வோம் என்பது தெரிந்து, துண்டுச் சீட்டில் எழுதி படத்தை விற்றுள்ளார்களாம்.
இதன் மூலம் தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கையை குறைத்துக் காட்ட முடியும் என்றும், இதனால் கமலுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் திரையரங்கு உரிமையாளர் சிலர் புகார் தெரிவித்துள்ளனர். எனவே கமல் அனைத்து தியேட்டர்களுக்கும் பிரதிநிதிகளை அனுப்பி கண்காணிக்க வேண்டும், டிடிஎச்சில் வெளியான பிறகும் அதுபோல செய்ய வேண்டும்.. அப்போதுதான் நிஜமான வசூல் நிலவரம் கமலுக்குக் கிடைக்கும் என்று தியேட்டர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment