கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் கடல் படத்தை தடை செய்யக் கோரி ஹைகோர்ட்டில் வழக்கு

|

Case Filed Hc Seeking Ban On Kadal

சென்னை: மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகக் கூறி அதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடல் படத்தில் கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகக் கூறி இயக்குனர் மணிரத்னம் மீது நேற்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடல் படத்திற்கு தடை விதிக்கக் கோரி ராயபுரம் கிழக்கு மாதா சர்ச் சாலையைச் சேர்ந்த எஸ்.ஏ. ஜான்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

‘கடல்' படத்தை மெட்ராஸ் டாக்சிஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது. தணிக்கை குழு ‘யு' சான்றிதழ் அளித்துள்ளது. இந்த படத்தில் கிறிஸ்தவ பாதிரியார்களும், போதகர்களும் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளனர். பாதிரியாருக்கு பெண்ணுடன் தொடர்பு இருப்பது போன்ற வசனமும் உள்ளது. ஏசு படத்தை உடைப்பது போன்றும் காட்சிகள் உள்ளன. இத்தகைய காட்சிகளும் வசனங்களும் கிறிஸ்தவ சமூகத்தினரை அவமதிப்பவை ஆகும். கிறிஸ்தவர்கள் மனதை புண்படுத்துவதாகவும் உள்ளது.

இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு கிறிஸ்தவ மதம் மீது தவறான எண்ணம் தோன்றும். குழந்தைகளுக்கும் தவறான சிந்தனையை உருவாக்கும். எனவே படத்தில் இடம் பெற்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு எதிரான காட்சிகளை ரத்து செய்ய வேண்டும். தியேட்டர்களில் படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment