அமெரிக்காவின் ஏபிசி சேனலில் 'கல்யாண சமையல் சாதம்' சினிமா ஷோ!

|

Kalyana Samayal Saadham Feature Us Tv Show

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை தயாரித்த ஆனந்த் கோவிந்தனும், அந்தப் படத்தை இயக்கிய அருண் வைத்யநாதனும் இணைந்து 'கல்யாண சமையல் சாதம்' படத்தை தயாரித்து வருகின்றனர்.

பிரசன்னா, லேகா வாஷிங்க்டன், டெல்லி கணேஷ், உமா பத்மநாபன் மற்றும் கீதா ரவிஷங்கர் நடித்துவரும் இத் திரைப்படத்தை, சமீபத்தில் அமெரிக்காவின் முதன்மை தொலைக்காட்சி நிறுவனமான ஏ.பி.சி தனது ‘Born To Explore' நிகழ்ச்சிக்காக படம் பிடித்தனர்.

ரிச்சர்ட் வீஸ் ஏ.பி.சி நிறுவனத்திற்காக தயாரிக்கும் இந்நிகழ்ச்சி கடந்த 2012ம் ஆண்டில் எமி விருதுக்காகப் போட்டியில் பங்கு பெற்ற, ஐந்தரை கோடி அமெரிக்கர்களை சென்றடையும் மிகப் பிரபலமான நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பற்றி ஒரு நிகழ்ச்சி எடுக்க வேண்டும் என்றவுடனே இந்தியாவில் வண்ணமயமாக நடக்கும் திருமணத்தைப் பற்றி எடுக்கப்படும் நகைச்சுவைப் படமான "கல்யாண சமையல் சாதம்" குழுவினரைப் பேட்டி காணலாம் என்று ரிச்சர்டுக்கு எண்ணம் தோன்ற, அதற்கு தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டார்களாம்.

படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.பிரசன்னா இதுபற்றி கூறுகையில், "இந்தியத் திருமணங்களையும், அதில் இருக்கும் பல வண்ணமயமான வழிமுறைகளையும் நான் விளக்கி சொல்ல, ரிச்சர்டும் அவரது குழுவினரும் ஆர்வமாக அதைப் படம் பிடித்தனர்.

படத்தின் ஒரு நிமிட ஒளிக்கோப்பை அவர்களிடம் காட்டிய போது, அவர்களின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. எங்கள் குழுவினருக்கு அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் உற்சாகமூட்டியதாக இருந்தது", என்றார்.

இந்த நிகழ்ச்சி நேஷனல் ஜியாகிராபி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது இன்னொரு கூடுதல் தகவல்.

கல்யாண சமையல் சாதத்தை கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, அரோரா எனும் புதிய இசை அமைப்பாளர் அறிமுகமாகிறார்.

 

Post a Comment