சென்னை: பழம்பெரும் இசையமைப்பாளர் வி தட்சிணா மூர்த்திக்கு வரும் ஜூலை 28-ம் தேதி பாராட்டு விழா நடக்கிறது. இதில் பங்கேற்க வருமாறு 3 மாநில கவர்னர்கள் மற்றும் இந்திய சினிமா ஜாம்பவான்கள் ரஜினி - கமலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
நல்ல தங்காள் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் 800 படங்களுக்கு மேல் இசையமைத்தவர் வி தட்சிணாமூர்த்தி.
தமிழில் ஒரு ஊதாப்பு கண்சிமிட்டுகிறது படத்தில் இடம்பெற்ற 'நல்ல மனம் வாழ்க' பாடல் இவர் இசையமைத்ததுதான்.
ஜீவநாடி, ஒரு கோவிலில் இரு தீபங்கள், நந்தா என் நிலா, ஜகத்குரு ஆதிசங்கரர் உள்ளிட்ட என தமிழில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மலையாளத்தில்தான் இவர் அதிகப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
1919-ல் கேரளாவில் ஆழப்புலாவில் பிறந்த இவர் தனது 13வது வயதில் சினிமாவுக்கு வந்தார். இப்போது அவருக்கு, தற்போது 93 வயது ஆகிறது. இப்போதும் மலையாளப் படங்களுக்கு இசையமைக்கிறார்.
80 வருடங்களாக சினிமாவில் இருக்கும் தட்சிணா மூர்த்திக்கு ஜுலை 28ஆம் தேதி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்ஷினா அமைப்பு செய்து வருகிறது.
இந்த பாராட்டு விழாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, மேற்கு வங்க கவர்னர்கள் பங்கேற்கின்றனர்.
ரஜினி, கமல், மம்முட்டி, மோகன்லால் போன்றோரையும் அழைத்துள்ளனர் விழா ஏற்பாட்டாளர்கள்.
தட்சிணாமூர்த்தியுடன் பணியாற்றிய இசை நிகழ்ச்சியில் கே.ஜே.ஏ.ஜேசுதாஸ், பி.அகிலா, ஜானகி, வாணி ஜெயராம் என அனைத்து பாடகர்களும் பாடுகின்றனர்.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற இசைத் துறை சாதனையாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
விழாவில் தட்சிணாமூர்த்திக்கு 108 தங்க புஷ்பங்களில் சொர்ணாபிஷேகம் நடத்தப்படும் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment