சென்னை: தில்லு முல்லு 2 படத்திற்கு தடைவிதிக்கக் கோரிய இயக்குனர் விசுவின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு படத்தை தில்லு முல்லு 2 என்ற பெயரில் எடுத்துள்ளனர். இதில் ரஜினி கதாபாத்திரத்தில் சிவா நடித்துள்ளார். படம் நாளை ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் படத்திற்கு தடை விதிக்கக் கோரி இயக்குனர் விசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
தில்லு முல்லு படத்துக்கு நான் தான் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளேன். தற்போது அந்த படத்தை "தில்லு முல்லு 2" என்ற பெயரில் வேந்தர் மூவிஸ் தயாரித்து உள்ளது. இதற்கு என்னிடம் அனுமதி கேட்கவில்லை. எனவே "தில்லு முல்லு 2" படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சுதாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேந்தர் மூவிஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நடராஜன் கூறுகையில்,
கோல்மால் என்ற இந்தி படம் தமிழில் தில்லு முல்லு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த படத்தை தயாரித்த நிறுவனத்திற்கு உரிய பணம் கொடுத்துவிட்டு தான் தில்லு முல்லு 2 தயாரிக்கப்பட்டுள்ளது. விசுவின் வசனத்தையோ, திரைக்கதையையோ பயன்படுத்தவில்லை. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து விசுவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Post a Comment