இதுவரை தமிழ் சினிமா சொல்லத் தயங்கிய 'சினேகாவின் காதலர்கள்’... கவுரவ வேடத்தில் சினேகா!

|

சென்னை: சினேகாவின் காதலர்கள் என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகிறது. பத்திரிகையாளர் முத்துராமலிங்கன் இயக்கும் இந்தப் படத்தில் முற்றிலும் புதுமுகங்களே நடிக்கின்றனர்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

"தமிழ் சினிமாவை இதுவரை கவ்விக் கொண்டிருந்த 'மசாலா சூதுகள்' விடைபெறும் 'நேரம்' வந்து விட்டது. பஞ்ச் டயலாக், பறந்துபறந்து அடிக்கும் ஃபைட்டு, குத்துப்பாட்டு போன்ற வெத்துவேட்டுக்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு, 'புதுசா எதாவது சொல்லுங்க பாஸ்' - என்று கேட்கும் தமிழ் சினிமா ரசிகனின் வேட்கைக்கு தீனியாக வருகிறது சினேகாவின் காதலர்கள்.

முற்றிலும் புதுமுகங்களுடன், இதுவரை தமிழ்சினிமா சொல்லத்தயங்கிய சங்கதியை செல்லுலாய்ட் சபைக்கு கொண்டு வரும் படமாக, தயாராகிறது சிநேகாவின் காதலர்கள்.

நட்பு - காதல் - காமம் இவற்றினூடாக பயணப்படும் ஒரு இளம் பெண்ணின் ரகஸிய உலகை அவளே சிநேகத்துடன் பகிர்ந்து கொள்ளும் படம் இது.

ஆண்கள் கோலோச்சும் உலகத்தில், உறவுகளுக்குள் தன்னைத் தொலைத்து விடாமல் ‘தன் சுயத்தை'க் கண்டறிய / காத்துக்கொள்ளப் போராடும் 21ஆம் நூற்றாண்டுப் பெண் சிநேகா. தமிழ்ச் சமூகத்தின் காதல் பற்றிய பழைய கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்கி ‘காதல்' என்பதற்கான புதிய அர்த்தங்களை எழுதிப்பார்க்கிறாள் அவள். ஆண் - பெண் உறவுகளை பெண்களின் பார்வையில் பேச முற்படுகிறது ‘சிநேகாவின் காதலர்கள்'.

journalist muthuramalincoln turns film director

கவுரவ வேடத்தில் சினேகா...

மற்றபடி நடிகை சிநேகாவுக்கும் இந்தக் கதையில் இடம்பெறும் சிநேகாவுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவித தொடர்பும் இல்லை. அதை ஊர்ஜிதப்படுத்தும் விதத்தில் அவரே ஒரு குட்டி கவுரவ வேடத்தில் நடிக்கவும் கூடும்.

துணிச்சலான சிநேகா, அவரது வாழ்வில் கடந்து செல்லும் 4 இளைஞர்களின் பாத்திரம் மற்றும் முக்கிய பாத்திரங்களுக்கான தேர்வு துரிதமாக நடைபெற்று வருகிறது. பாடல்களுக்கான இசைக் கோர்ப்பு இம்மாதம் இறுதியில் துவங்க, ஜுன் இறுதியில் கொடைக்கானலில் படப்பிடிப்பு துவங்கி, மதுரை பெங்களூர்கள் வழியாக ஆகஸ்டில் படப்பிடிப்பு முடிவடைகிறது.

முத்துராமலிங்கன்

தமிழன் திரைப்பட நிறுவனம் சார்பாக, ‘தமிழன் தொலைக்காட்சியின் நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம் அளவான பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்க, அவருடன் இணை தயாரிப்பாளராக கரம் கோர்க்கிறார் அமலா கலைக்கோட்டுதயம். கடைசிவரை பிரபலமே ஆகாத பத்திரிகையாளரும், சில முன்னணி இயக்குனர்களின் பின்னணியில் இருந்து அவர்களது வெற்றிக்கு அரும்பாடுபட்டவருமான முத்துராமலிங்கன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார்.

இசைக்கு முக்கியத்துவம் உள்ள, இசையில் புதிய ஒரு அனுபவத்தைக் கொடுக்கவல்ல, எட்டுப்பாடல்கள் இடம்பெறும் இப்படத்துக்கு அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் இரா.ப்ரபாகர் இசையமைக்கிறார். பாடல்கள் நெல்லைபாரதி. தயாரிப்பு நிர்வாகம் அருள். மக்கள் தொடர்பு நிகில்முருகன்.

'சிநேகாவின் காதலர்கள்' திரை தரிசனம் அநேகமாக டிசம்பராக இருக்கக்கூடும்!"

 

Post a Comment