ஹைதராபாத்: பிரபல பாலிவுட் நடிகை தியா மிர்சா, தனது ஹைதராபாத் வீட்டுக்கு தண்ணீர் வரியாக ரூ 2 லட்சத்து 26 ஆயிரம் பாக்கி வைத்துள்ளாராம்.
பாலிவுட்டில் டாப் நடிகையாக இருந்தாலம், தியா மிர்சா பிறந்தது ஆந்திராவில். மாடல் அழகி, மிஸ் ஏசியா பசிபிக் பட்டம் வென்றவர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகி என பல துறைகளில் கால்பதித்திருப்பவர் தியா மிர்சா.
முன்னாபாய் எம்பிபிஎஸ், ஓம் சாந்தி ஓம் உள்பட பல படங்களில் நடித்துள்ள தியா மிர்சா, முதலில் அறிமுகமானது என் சுவாசக் காற்றே என்ற தமிழ்ப் படத்தில்தான்.
இவருக்கு ஹைதராபாத் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் பெரிய வீடு உள்ளது. இந்த வீட்டுற்கு கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து தண்ணீர் வரி செலுத்தவில்லை. 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவரது கணக்கில் ரூ. 33 ஆயிரத்து 480 வரி பாக்கி இருந்தது. தற்போது வட்டியுடன் சேர்த்து ரூ. 2 லட்சத்து 26 ஆயிரம் கட்டவேண்டும் என்று ஐதராபாத் மெட்ரோபாலிடன் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் ரெட் நோட்டீஸ் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குடிநீர் வாரியம் இந்தத் தொகையை செலுத்த சொல்லி பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. ஆயினும் பணம் செலுத்தப்படாததால் 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஒரு வீட்டின் உரிமையாளர் வீட்டில் இல்லாதபோது இணைப்பை துண்டிக்க சொல்லிவிட்டு செல்ல வேண்டும். தியாவின் சார்பில் அதுவும் செய்யப்படவில்லை என்று ஜுபிலி ஹில்ஸின் குடிநீர் வடிகால் வாரிய பொறுப்பாளரான பி. ஜே. ஸ்ரீநாராயணா தெரிவித்தார்.
ரெட் நோட்டீஸ் தகவல் கிடைத்த 15 நாட்களுக்குள் பணம் செலுத்தப்படுதல்வேண்டும். இல்லையெனில், குடிநீர் இணைப்பைத் துண்டிப்பதுடன், வருவாய் வசூல் சட்டத்தின் கீழ், குடிநீர் வாரியத்தின் தகவல் பதிவேட்டில் இணைக்கப்பட்டுள்ள அவரது அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் மூலம் வசூலிக்கப்படும் என்று குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது.
Post a Comment