முதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு

|

முதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு

பெங்களூரு: நடிகர் விவேக் முதல் முறையாக கன்னடத்தில் பேசி நடித்துள்ள சந்திரா திரைப்படம் கர்நாடகா முழுவதும் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ரேயா நாயகியாகவும் பிரேம் குமார் நாயகனாகவும் நடித்துள்ள படம் சந்திரா. தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாரான இந்தப் படம், இப்போது கன்னடத்தில் மட்டும் வெளியாகிவிட்டது. ரூபா அய்யர் இயக்கியுள்ள இந்தப் படம் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டது.

மன்னர் குலத்தில் பிறந்த சந்திராவான ஸ்ரேயாவுக்கும், அந்த குடும்பத்துக்கு நெருக்கமான நண்பரின் மகன் சந்திரசேகரன் என்கிற சந்திராவுக்கும் இடையில் காதல் பூக்கிறது. ஆனால் மன்னர் குடும்பம் தங்களுக்கு சமமான அந்தஸ்தில் உள்ள பையனுக்கு சந்திராவை மணம் முடிக்க முடிவு செய்கிறது. சந்திரா - சந்திரசேகரன் காதல் நிறைவேறியதா என்பதுதான் இந்தப் படத்தின் சில வரிக் கதை.

படத்தில் சந்திராவாக வரும் ஸ்ரேயாதான் ஹைலைட். படம் முழுக்க அவரது கவர்ச்சியை செலுலாய்டில் விருந்தாகப் படைத்திருக்கிறது காமிரா. இதுவரை இல்லாத அளவுக்கு வஞ்சனையின்றி கவர்ச்சியை வாரி இறைத்திருக்கிறார் இந்தப் படத்தில் ஸ்ரேயா.

படத்தில் இன்னொரு முக்கிய விஷயம், நம்ம ஊர் சின்னக் கலைவாணர் விவேக்கின் காமெடிதான். பொதுவாக தமிழ் காமெடியன்கள் வேறு மொழிக்குப் போனால் டப்பிங் குரல்தான் பயன்படுத்துவார்கள். இதனால் அவர்களின் ஒரிஜினல் குரல் கேட்டுப் பழகியவர்களால் அந்தப் படங்களை ரசிக்க முடியாமல் போய்விடும். காரணம் காமெடியன்களின் அடையாளங்களுள் முக்கியமானது அவர்களின் குரல்.

இதை நன்கு உணர்ந்தவர் விவேக். அதன் விளைவு, கன்னடமாக இருந்தால் என்ன... நானே கற்றுக் கொண்டு பேசிவிடுகிறேன் என்று உறுதியாக இருந்தாராம். கன்னடத்தை அந்த லோக்கல் ப்ளேவரோடு அசத்தலாகப் பேசியிருக்கிறார் விவேக் என படம் பார்த்த கன்னட ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். இந்தப் படத்தில் அவரோடு காமெடி செய்த சாது மஹராஜ் சொதப்பினாலும், விவேக் அதையும் சமாளித்து நடித்திருக்கிறார் என்று விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.

பரவாயில்லையே... விவேக்குக்கு இன்னொரு கேட்டும் ஓபனாயிடுச்சு!

 

Post a Comment