சென்னை: நடிகை அஞ்சலியை வரும் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் களஞ்சியத்துடன் சேர்ந்து தனது சித்தி பாரதி தேவி கொடுமைப்படுத்துவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை அஞ்சலி பரபரப்பு பேட்டி அளித்தார். இதையடுத்து அஞ்சலி தலைமறைவானார்.
இந்த நிலையில், அஞ்சலியை ஆஜர்படுத்தக் கோரி அவரது சித்தி பாரதி தேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இதனால் சில நாட்கள் தலைமறைவாக இருந்த அஞ்சலி, ஹைதராபாத் காவல்துறை இணை ஆணையர் முன்னிலையில் ஆஜரானார்.
அஞ்சலியின் தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்தாலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி சித்தி பாரதிதேவி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அஞ்சலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாரதிதேவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
ஆனால் இன்று அஞ்சலியை போலீசார் ஆஜர்படுத்தவில்லை.அஞ்சலி பாதுகாப்பாக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அஞ்சலிக்கு எச்சரிக்கை விடுத்த உயர்நீதிமன்றம், அஞ்சலி ஆஜராகத் தவறும் பட்சத்தில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி கூறினார். இதனையடுத்து வரும் 9ஆம் தேதி அஞ்சலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
Post a Comment