புற்று நோயின் பிடியில் பிரபல இயக்குநர் ராசு மதுரவன்!

|

புற்று நோயின் பிடியில் பிரபல இயக்குநர் ராசு மதுரவன்!

சிகரெட், போதைப் பாக்கு, போதைப் புகையிலை... இவற்றில் ஏதாவது ஒன்றைப் பற்றிக்கொள்ளாத சினிமாக்காரர்கள் ரொம்பக் கம்மி. மற்றவர்கள் இந்தப் பழக்கங்களுக்கு ஆளாகி உயிரை சிறுகச் சிறுக போகடித்துக் கொண்டிருப்பவர்களே.

இந்தப் பழக்கத்தால் கேன்சர் நிச்சயம் என்று தெரிந்தும் அதை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது. 'இது மிகவும் கொடியது' என அரசுத் தரப்பு நியூஸ் ரீலை, சிகரெட் ஊதியபடிதான் சினி்மாக்காரர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் ராசு மதுரவன் நிலையை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவன் ராசு மதுரவன். மறைந்த மணிவண்ணனிடம் பணியாற்றியவர்.

பூமகள் ஊர்வலம் என்ற படத்தில் இயக்குநராக அறிமுகமானார். குடும்பம், கிராமத்து உறவுகளை அருமையாகச் சித்தரித்த மாயாண்டி குடும்பத்தார் படம் இவர் உருவாக்கியதுதான்.

இவருக்கு இப்போது நாக்கு மற்றும் தொண்டை பகுதியில் கேன்சர் நோய் பரவியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து தீவிர சிகிச்சை செய்து வருகின்றனர். இது கொஞ்சம் முற்றிய நிலையில் இருப்பதால், உறவினர்களும் நண்பர்களும் அதிர்ந்து நிற்கிறார்கள்.

காரணம், இந்த சிகரெட் மற்றும் பாக்குப் பழக்கம்தான் என்பதை தெளிவாகச் சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள்.

மக்கள் நன்கறிந்த ஒரு கலைஞன் கண்ணெதிரே புற்றின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கிறார் புகைப் பழக்கத்தால். புகையின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் திரையுலக கலைஞர்களும் மற்றவர்களும், எப்படி அதிலிருந்து வெளிவரப் போகிறார்கள்?

 

Post a Comment