சதி பண்ணி கடத்தல் வழக்கில் சிக்க வெச்சிட்டாங்களே! - சனா கான்

|

சதி பண்ணி கடத்தல் வழக்கில் சிக்க வெச்சிட்டாங்களே! - சனா கான்

சிறுமி கடத்தப்பட்ட வழக்கில் தன்னை சதி செய்து சிக்க வைத்துவிட்டதாக புலம்பியுள்ளார் நடிகை சனா கான்.

சனா கான் உறவினர் நவித்கான் என்பவர் ஒரு 15 வயது பெண்ணை விரும்பியதாகவும், அதற்கு மறுத்த அந்தப் பெண்ணை காரில் கடத்த சனா கான் உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். சனாகான் மீதும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய போலீசார் தேடினர். ஆனால் சனா தலைமறைவானார். முன்ஜாமீனுக்கு முயன்று, இப்போது கிடைத்ததும் வெளியில் வந்துள்ளார்.

வழக்கு குறித்து சனாகான் கூறுகையில், "நான் 15 வயது சிறுமியை கடத்த முயன்றதாக வெளியான செய்திகளில் சிறிதும் உண்மையில்லை. ஒரு பிரபல நடிகையாக இருந்து கொண்டு இதுபோன சின்னத்தனமான வேலைகளை செய்வேனா...

இதைக் கூட யோசிக்காமல் என்னை இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர்.

குறிப்பிட்ட சிறுமி தனது தாயுடன் வந்து என்னிடம் ஆட்டோ கிராப் வாங்கிச் சென்றாள். மற்றபடி அவளுடன் எந்த தொடர்பும் கிடையாது. சதி செய்து வழக்கில் என்னை சிக்க வைத்து விட்டனர் என்பது மட்டும் உண்மை.

நான் தலைமறைவானதாக வேறு வதந்தி பரவியது. நான் எங்கேயும் ஓடிப்போக வில்லை. படப்பிடிப்பில்தான் இருந்தேன். இப்போது ஜாமீன் பெற்றுள்ளேன். நான் முன்ஜாமீனுக்கு முயன்றதைக் கூட சிலர் தவறாகப் பேசினர். என்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், சிறை செல்வதைத் தவிர்க்க இதுதானே ஒரே வழி. இதில் தவறு என்ன?

எனக்கு எதிராக சர்ச்சைகள் கிளப்பி விடப்படுகின்றன. இதை நான் பொருட்படுத்தப் போவது இல்லை. சினிமாவில்தான் என் முழு கவனமும் இருக்கும். தமிழ், இந்தி, மலையாள படங்களில் தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.

ஜூலை 5-ம் தேதி முதல் சல்மான் கானுடன் அவர் நடிக்கும் மென்டல் இந்திப் படப்பிடிப்பில் பங்கேற்கிறார் சனா கான்.

 

Post a Comment