சம்பள உயர்வு, திருட்டு விசிடி குறித்து முதல்வரைச் சந்தித்து மனு கொடுக்க பெப்சி முடிவு!

|

சென்னை: சினிமா தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் திருட்டு விசிடி பிரச்சினை குறித்து முதல்வரைச் சந்தித்து மனு கொடுக்க பெப்சி முடிவு செய்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை சென்னையில் இயக்குனரும், சம்மேளனத்தின் தலைவருமான அமீர் தலைமையில் நடந்தது.

இதில் இயக்குனர்கள் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, வி.சேகர் உள்ளிட்ட சம்மேளன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பொதுக் குழுவில் சினிமா தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, திருட்டு விசிடியை தடுப்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28-10-2013 அன்று பேரணியாக சென்று முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திப்பதாக முடிவு எடுத்துள்ளனர்.

சம்பள உயர்வு, திருட்டு விசிடி குறித்து முதல்வரைச் சந்தித்து மனு கொடுக்க பெப்சி முடிவு!

இதுகுறித்து பெப்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் 23 சங்கங்கள் உள்ளன. இதில் 24,000 தொழிலாளர்கள் உள்ளனர். இந்த தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பிற்காக சம்மேளனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பாக வரும் 28.10.2013 திங்கட்கிழமை அன்று சம்மேளனத்தில் இணைக்கப்பட்ட அனைத்து சங்கங்களின் 24,000 உறுப்பினர்களும் கீழ்க்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரை சந்திக்க மாபெரும் பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர்.

கோரிக்கைகள்:

1. கடந்த மூன்று ஆண்டுகளாக முடிக்கப்படாத நிலையில் உள்ள சினிமா தொழிலாளர்கள் மற்றும் சின்னத்திரை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தையை விரைந்து முடித்து எங்களது 24,000 தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்த கோரியும்.

2. திருட்டு விசிடி மீண்டும் தலைதூக்குவதை தடுத்த நிறுத்தக் கோரியும்

3. மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக முதல்முறையாக திரைப்படத் துறைக்கு வீடு கட்ட தங்களது அரசு நிலம் வழங்கியும் சில இடர்பாடுகளால் வீடு கட்ட முடியாமல் இருக்கும் நிலையை மாற்றக் கோரியும்.

4. சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுள்ள சங்கங்களின் உறுப்பினர்களுக்காக ஏற்படுத்திய கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் தேர்தலை முறையற்ற முறையில் நடத்திய தேர்தல் அதிகாரி மற்றும் அதற்கு உதவிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்.

5. தவறான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு வசதி சங்கத்தில் தலைவராக உள்ள செந்தில், வி.சி.குகநாதன் உள்ளிட்ட குழுவை முழுவதுமாக கலைத்து மீண்டும் முறையாக தேர்தலை நடத்தக் கோரியும்.

6. கடந்த இரண்டு வருடமாக சம்மேளனத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட சிலர் தொடர்ந்து சம்மேளனத்தில் உள்ள அனைத்து சங்கங்களுக்கும் கொடுத்து வரும் தொல்லைகளை நிறுத்தக் கோரியும், அதனைத் தொடர்ந்து திரைப்படத் தொழில் பாதிக்கப்படுவதை தடுக்கக் கோரியும்.

7. சில சமூக விரோத சக்திகளுக்கு துணை புரியும் ஆர் 8 வடபழனி காவல் நிலையத்தின் ஆய்வாளர் சிவகுமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கடந்த 27.05.2013 அன்று சம்மேளன நிர்வாகிகள் முது தாக்குதல் தொடுத்தவர்கள் மீது இன்றுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர்களை கைது செய்யக்கோரியும்.

8. தொடர்ந்து சம்மேளன நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதை தடுத்து நிறுத்தக் கோரியும்.

9. சம்மேளனத்திற்கு சொந்தமான பணத்தை முறைகேடாக பயன்படுத்திய வி.சி.குகநாதன் உள்ளிட்டோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும்...

10. பாதுகாப்பற்ற நிலையில் இருக்கக்கூடிய திரைப்பட தொழிலாளர்களின் வாழ்க்கையில் உரிய பாதுகாப்பை ஏற்படுத்திட வேண்டும்

என்பது உள்ளிட்ட பத்து கோரிக்கைகளை வலியுறுததி தமிழக முதல்வரை பேரணியாக சென்று சந்தித்து முறையிட உள்ளோம்.

-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Post a Comment