சிவகாசி: காரில் போலி நம்பர் பிளேட் பயன்படுத்திய வழக்கில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் சிவகாசி நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்.
பவர்ஸ்டார் சீனிவாசன் கடன் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் கமிஷன் வாங்கி ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் மீது பலர் மோசடி புகார் கொடுத்தனர். டெல்லி திகார் சிறையில் இருந்த பவர் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார்.
அதன் பிறகு வழக்கம்போல் படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டில் காரில் போலி நம்பர் பிளேட் பொருத்தி சிவகாசியில் பயணம் செய்ததாக பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அவர் மீது சிவகாசி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது பவர்ஸ்டார் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பவர் முன்ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரை சிவகாசி நீதிமன்றத்தில் சரண் அடைந்து பிடிவாரண்ட் உத்தரவை வாபஸ் பெறக் கோரி மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. மேலும் அந்த மனுவை தாக்கல் செய்த தினமே பரிசீலனை செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து பவர்ஸ்டார் இன்று காலை சிவகாசி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
Post a Comment