மீடியாவின் வளர்ச்சி... வைரமுத்துவுக்கு ஏன் இவ்வளவு எரிச்சல்?

|

மீடியாவின் வளர்ச்சி... வைரமுத்துவுக்கு ஏன் இவ்வளவு எரிச்சல்?

எந்த சினிமா நிகழ்ச்சிக்கு வந்தாலும் 'பாசத்துக்குரிய பத்திரிகை நண்பர்களே' என வைரமுத்து விளிப்பதை நிச்சயம் கேட்டிருப்பீர்கள்.

அவர் பாசம் ரொம்ப மோசம் என்பதே உண்மை. அதை நிரூபிக்கும் வகையில் நேற்று முன்தினம் அமைந்தது அவர் பேச்சு.

அது ஒரு சுமாரான, வருமா வராதா என்ற சந்தேகத்துக்குரிய படத்தின் இசை வெளியீட்டு விழா.

நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, அந்த புது இயக்குநருக்கு ஏகத்துக்கும் ஐஸ் வைத்துக் கொண்டிருந்தார் தனது நீண்ட பேச்சில்.

திடீரென ஒரு பிரேக் விட்டவர், அடுத்து மீடியா பக்கம் தன் பேச்சைத் திருப்பினார். குறிப்பாக இணையதளங்கள்.

"இப்போது ஊடகங்களின் வேகம் பிரமிக்க வைக்கிறது. நான் மாட்டு வண்டியில் ஏறிப் போய் மாட்டுக்கார வேலன் படம் பார்த்தேன்.

எங்கள் ஊரில் வயலுக்கு போய்விட்டு வந்து குளித்துவிட்டு மட்டமான பவுடர் ஒன்றை முகத்தில் அடித்துக் கொண்டு குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு போவார்கள்.

இப்போது எல்லாமே போய்விட்டது. படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக புள்ளிவிபரம் சொல்கிறது. ஒரு பெரிய ஹீரோ நடித்த படத்தை முதலில் ஒரு லட்சம் பேர் பார்த்தால், அதே ஹீரோ நடித்து வெளிவரும் அடுத்த படத்தை பார்க்க வரும் எண்ணிக்கை 80 ஆயிரமாக குறைகிறது. இதற்கு காரணம் ஊடகங்கள்தான்.

இப்போது செல்போனிலேயே படம் பார்த்துவிட முடிகிறது. இணையதளங்கள் பெருகிவிட்டன. இவற்றையெல்லாம் ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராவிட்டால் சினிமா அழிந்துவிடும். தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு ஏதாவது முடிவு செய்ய வேண்டியது கட்டாயமாக இருக்கிறது," என்றார் வைரமுத்து.

நியாயமாக தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது வைரமுத்து மீதுதான்.

தான் வேலை பார்த்த, பாடல்கள் எழுதிய படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்குப வர ரூ 1 லட்சம் பணத்தை கறாராகக் கேட்டுப் பெற்றுள்ள வைரமுத்து, இதுபோன்ற தனது அசிங்கங்கள் அம்பலத்துக்கு வருவது பொறுக்காமல் ஊடகங்களைத் தட்டி வைக்கச் சொல்கிறாரா?

தயாரிப்பாளர் சங்கம் நியாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டியது யார் மீது? தான் வேலை பார்த்த படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கையூட்டு கேட்கும் வைரமுத்து மீதா? அதை அம்பலப்படுத்தும் மீடியா மீதா? என கேள்வி எழுப்பியுள்ளனர் மீடியாக்காரர்கள்.

 

Post a Comment