சென்னை: சிவாஜி சிலையை அகற்றலாம் என தமிழக அரசு முடிவாகச் சொல்லிவிட்ட நிலையில், அதுகுறித்து சினிமாக்காரர்கள் எந்த கருத்தையும் சொல்ல முன்வரவில்லை.
இதைவிட கவனிக்கத்தக்க விஷயம்... சிவாஜியின் குடும்பத்தினர் இந்த விவகாரத்தில் வாயே திறக்காமலிருப்பதுதான்.
இந்த சிலையை அகற்றக் கோரி கருணாநிதி முதல்வராக இருந்த காலத்திலேயே வழக்கு தொடரப்பட்டுவிட்டது. ஆனால் அப்போது தமிழக அரசு இந்த சிலையால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறி, வழக்கை தள்ளிப் போட்டு வந்தது.
ஜெயலலிதா முதல்வரான பிறகும்கூட இந்த சிலை விவகாரம் உடனே கிளம்பவில்லை. 'இது முதல்வரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பல்ல, நீதிமன்றத்தில் வழக்கு வந்திருக்கிறது... அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து தமிழக அரசு பதிலளித்திருக்கிறது' என்று சொல்லும் அளவுக்கு கவனமாக இந்த விவகாரம் கையாளப்பட்டுள்ளது.
சிலையை எடுக்கக் கூடாது என எதிர்த்தால், அது மக்கள் விரோத கருத்தாக முன்நிறுத்தப்படும் என்பது அன்னை இல்லத்துக்கு தெளிவாகப் புரிந்திருக்கிறது.
இதுகுறித்து சிவாஜி அபிமானிகள் பலர் பிரபு மற்றும் ராம்குமாரைச் சந்தித்து, நாம ஏதாவது போராட்டம் நடத்தலாமா என்று கேட்டுள்ளனர்.
அதற்கு பதிலளித்தவர்கள், பேசாம போங்கப்பா... போராட்டம் அது இதுன்னு நீங்க பண்ணிட்டுப் போயிடுவீங்க. பல வகையிலும் பாதிப்பு எங்களுக்குதான். அதான் வேற இடத்தில வைக்கலாம்னு சொல்லிடுச்சே அரசு... இத்தோட விடுங்க, என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்களாம்!!
Post a Comment