சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தான் வாழ்த்தியதை பேஸ்புக்கிலும் நிலைத் தகவலாக வெளியிட்டுள்ளார் கருணாநிதி.
கருணாநிதி முதல்வராக இருந்தாலும் சரி, இல்லாமலிருந்தாலும் சரி.. தொடர்ந்து அவருடன் நட்பு பாராட்டி வருபவர் ரஜினி. 1996-ல் திமுக தலைமையில் ஆட்சி அமையக் காரணமாக இருந்தவரே ரஜினிதான் என்பதால், அவருடனான உறவில் சிறு பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது திமுகவும்.
ரஜினி உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, தன் வயது, நடக்க இயலாமை என எதையும் பொருட்படுத்தாமல் முதல்வர் கருணாநிதி சக்கர நாற்காலியிலேயே போய் ரஜினியைப் பார்த்து நலம் விசாரித்தார். அதுமட்டுமல்ல, அவருக்கு ஒன்றுமில்லை, நலமுடன் வருவார் என வெளியில் திரண்டிருந்தவர்களிடம் தகவலைச் சொன்னார். அதன் மூலம் அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு தங்களுக்குள் இருப்பதை கருணாநிதி உணர்த்தினார்.
ஆட்சியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆண்டுதோறும் ரஜினிக்கு தன் பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லத் தவறியதில்லை கருணாநிதி.
இந்த ஆண்டும் ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லியுள்ளார் கருணாநிதி.
இதனை பேஸ்புக்கில், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு ,நான் இன்று ரஜினிகாந்த் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்தேன்," என நிலைத் தகவலாக வெளியிட்டுள்ளார்.
திமுக பொருளாளர் முக ஸ்டாலினும் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
Post a Comment