சென்னை: 28 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பி தராமல் மோசடி செய்து விட்டதாக பிரபல தயாரிப்பாளர் எஸ். நந்தகோபால் மீது பைனான்சியர் ஒருவர் பரபரப்பு புகார் கூறியிருக்கிறார்.
மெட்ராஸ் எண்டர்டெயிமெண்ட் பட நிறுவனம் சார்பில் 'நியூட்டனின் மூன்றாம் விதி', 'மச்சக்காரன்', 'சில்லுன்னு ஒரு சந்திப்பு' ஆகிய படங்களைத் தயாரித்தவர் எஸ்.நந்தகோபால்.
இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தயாள் என்ற பிரபல சினிமா பைனான்சியரிடம் 28 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியிருக்கிறார். ஆனால் இன்றுவரை அந்த பணத்தை திருப்பி தரவில்லை. அதனால் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் தயாள்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் தலைமறைவாகியுள்ள அவரை போலீசார் வலைவீசித் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து பைனான்சியர் தயாள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் படம் தயாரிப்பதாகச் சொல்லி என்னிடம் சுமார் 3 வருடங்களுக்கு முன்பு 27 லட்சம் பைனான்ஸ் வாங்கினார். அப்படி வாங்கிய அவர் குறிப்பிட்ட நாட்களுக்குள் என்னுடைய பணத்தை தரவில்லை. பலமுறை கேட்டும் அவர் எனக்கு பணத்தை தராமல் இழுத்தடித்தார்.
அதனால் நான் சென்னை எழும்பூரிலுள்ள விரைவில் நீதிமன்றத்தில் அவர்மீது வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் நேரில் ஆஜராகாததால் அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதைக் கேள்விப்பட்ட அவர் தலைமறைவாகி விட்டார். இந்த வழக்கில் அவர்மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்கும்," என்றார்.
Post a Comment