யாழ்ப்பாணம்: நடிகர் விஜய் நடித்த ஜில்லா திரைப்படம் பற்றிய "உதயன்" நாளேட்டின் விமர்சனத்தைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் சில இளைஞர்கள் ஈடுபட்டனர். ஆனால் ஈழத் தமிழருக்கு பிரச்சனைகள் இருக்கும்போது சினிமா நடிகருக்காக போராடுவதா என அந்த இளைஞர்களை வட மாகாண சபை அமைச்சர் ஐங்கர நேசன் விரட்டியடித்திருக்கிறார்.
உதயன் நாளிதழின் ஞாயிறு இணைப்பான சூரியகாந்தியில் விஜய் நடித்த ஜில்லா திரைப்படத்தின் விமர்சனம் வெளியாகி இருந்தது. அதில் "இந்தத் திரைப்படத்தைப் பார்க்க திரையரங்குக்குப் போய் மூன்று மணி நேரத்தை வீணடிப்பது கொழுப்பு அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?" என்று எழுதப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 14 இளைஞர்கள் நேற்று உதயன் பத்திரிகை அலுவலகம் முன்பாக பதாகைகள் ஏந்தி கண்டன போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த இலங்கை வடக்கு மாகாணசபையின் விவசாயத்துறை அமைச்சர் ஐங்கர நேசன், நடிகனுக்கு கட் அவுட் வைக்கிறீர்களே.. நீங்கள் தமிழன் .. இங்குள்ள தமிழர்கள் உறவுகளைக் காணவில்லை என்று அழுது புலம்புகின்றனர்.. ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வருகிறார்கள்.. அதற்கெல்லாம் போராடாமல் ஒரு நடிகருக்காக இப்படி நிற்கிறீர்களே? அதுவும் ஒரு பத்திரிகை விமர்சனம் எழுதியதற்காக போராட வந்திருக்கிறீர்களே? என்று கடுமையாக சாடினார்.
பின்னர் சிறிது நேரத்தில் அங்கு நின்ற இளைஞர்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினர்.
http://onlineuthayan.com/News_More.php?id=653622591922315069
Post a Comment