திருவனந்தபுரம்: நடிகர் மம்முட்டியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாததால் அவரால் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க இயலாமல் போய்விட்டது.
கேரளாவில் நேற்று நடந்த லோக்சபா தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.
பெரும்பாலான மலையாள நடிகர், நடிகைகள் தங்கள் வாக்குகளை காலையிலேயே பதிவு செய்தனர்.
"இன்னசென்ட்" ஓட்டு:
நடிகரும், சாலக்குடி தொகுதி மார்க்சிஸ்ட் ஆதரவு பெற்ற வேட்பாளருமான "இன்னசென்ட்" சாலக்குடியிலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மனைவி ஆலீசுடன் வந்து ஓட்டு போட்டார்.
பிரபலங்களின் "வாக்கு":
நடிகர் சுரேஷ் கோபி திருவனந்தபுரம் சாஸ்தமங்கலத்திலும், திலீப் ஆலுவாவிலும், ஜகதீஷ் காலடியிலும், மணியன் பிள்ளை ராஜு திருவனந்தபுரத்திலும், நடிகை காவ்யா மாதவன் எர்ணாகுளத்திலும், அன்சிபா கான் கோழிக்கோட்டிலும், பின்னணி பாடகர் ஜி.வேணுகோபால் திருவனந்தபுரம் பட்டத்திலும், ஓட்டு போட்டனர்.
மம்முட்டியால் முடியவில்லை:
நடிகர் சுரேஷ் கோபி கடந்த சில தினங்களுக்கு முன் துபாய் சென்றிருந்தார். ஓட்டு போடுவதற்காகவே துபாயிலிருந்து வந்ததாக அவர் தெரிவித்தார். இதற்கிடையே பிரபல நடிகர் மம்மூட்டியால் இம்முறை ஓட்டு போட முடியவில்லை.
முகவரி மாற்றம்:
மார்க்சிஸ்ட் ஆதரவாளரான இவர் அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் ஓட்டு போடுவது வழக்கம். எர்ணாகுளம் காந்தி நகரில்தான் கடந்த தேர்தல் வரை இவருக்கு ஓட்டு இருந்தது. சமீபத்தில்தான் இவர் பனம்பிள்ளி நகரிலுள்ள வீட்டுக்கு மாறினார். ஆனால் வாக்காளர் பட்டியலில் இருந்து இவர் தனது பெயரை புதிய முகவரிக்கு மாற்ற மறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
பட்டியலில் நீக்கம்:
நேற்று காலை ஓட்டு போடுவதற்காக மம்மூட்டி புறப்பட்டார். அப்போது தான் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை என தெரியவந்தது.
ஓட்டு போடவில்லை:
மம்மூட்டி வீடு மாறியதும் அவரது பெயர் காந்தி நகர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதும் பின்னர் தான் தெரியவந்தது. இதையடுத்து மம்மூட்டியால் இந்த தேர்தலில் ஓட்டு போட முடியவில்லை.
Post a Comment