வடிவேலுவின் தெனாலிராமனுக்கு தடைகோரிய மனு டிஸ்மிஸ்!

|

மதுரை: வடிவேலு நடித்த தெனாலிராமன் திரைப்படத்தை வெளியிட தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக பழந்தமிழர் மக்கள் கட்சி நிர்வாகி வீரகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "நடிகர் வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இதில், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். கிருஷ்ணதேவராயர் சிறந்த போர்வீரர். சிறப்பான ஆட்சி நடத்தியவர். தென்னிந்தியாவில் இஸ்லாமிய படையெடுப்பை தடுத்தவர் என பள்ளி வரலாற்று பாடத்தில் படித்திருக்கிறேன்.

வடிவேலுவின் தெனாலிராமனுக்கு தடைகோரிய மனு  டிஸ்மிஸ்!

கோமாளி

அவரது வேடத்தை ஏற்றுள்ள வடிவேலு கோமாளி போன்று காட்சி தருகிறார். மேலும், மூடர்கள் பேசுவது போல் அவரது வசனங்கள் உள்ளன. கிருஷ்ண தேவராயருக்கு 36 மனைவியர் 52 குழந்தைகள் இருப்பதாகவும் படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற வரலாற்று தகவல் கிடையாது.

தடை விதிக்கணும்

ஒரு பேரரசரின் வரலாற்றை திரித்துக்கூறி பணம் சம்பாதிக்க முற்படுவதை ஏற்கக்கூடாது. மேலும் இந்த படத்தை பார்க்கும் குழந்தைகள் கிருஷ்ணதேவராயரை ஒரு கோமாளி போல் கற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்,'' என அதில் குறிப்பிட்டிருந்தார்.

தள்ளுபடி

இம்மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. "வரலாறுகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எழுதியிருக்கின்றனர். எனவே வரலாறு அடிப்படையில் திரைப்படத்துக்கு தடை கோருவதை ஏற்கமுடியாது," என குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

சென்னை நீதிமன்றத்திலும்...

இதே போன்றதொரு மனு சென்னை உயர்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கைப் பரிசீலித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், 'தமிழ் மொழி தெரியாததால் இந்த வழக்கை தாங்கள் விசாரிக்க விரும்பவில்லை. வேறு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படும்," என்றும் உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.

 

Post a Comment