திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கு தடை கேட்டு முஸ்லிம் அமைப்பு வழக்கு!

|

சென்னை: திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம் அமைப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது.

திருமணம் என்னும் நிக்காஹ் என்ற தலைப்பும், அது எதைப் பற்றிய கதை என்ற தகவலும் வெளியானதிலிருந்தே, அந்தப் படத்துக்கு ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆட்சேபணை தெரிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இப்போது அது நடந்தேவிட்டது. திருமணம் என்னும் நிக்கா படத்துக்கு எதிராக தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத் என்ற அமைப்பின் துணைத் தலைவர் அலிகான், சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:

திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கு தடை கேட்டு முஸ்லிம் அமைப்பு வழக்கு!

நடிகர் ஜெய், நடிகை நஸ்ரியா நடித்துள்ள திருமணம் என்னும் நிக்காஹ் படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.

இந்த படம் நாளை (30-ந் தேதி) வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷியா முஸ்லிம் சமுதாயத்தின் மதக் கொள்கை தவறாகவும் அவதூறாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளிவந்தால், மத மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஏற்கனவே தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் வேலாயுதம் என்ற படத்தில் மன உணர்வுகளை புணப்படுத்தும் விதமாக காட்சிகளை எடுத்திருந்தார். தற்போது திருமணம் என்னும் நிக்காஹ் படத்திலும் முஸ்லிம் சமுதாயத்தை விமர்சனம் செய்துள்ளார்.

எனவே ரவிச்சந்திரன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்ககோரி போலீஸ் கமிஷனரிடம் கடந்த 20-ந் தேதி புகார் செய்தோம். இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

எனவே திருமணம் என்னும் நிக்காஹ் படத்தை 30-ந் தேதி வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். நாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவிச்சந்திரன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடவேண்டும்.

-இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சென்னை போலீஸ் கமிஷனர், சென்சார் வாரியத்தின் மண்டல அதிகாரி, படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

 

Post a Comment