இளையராஜா - வைரமுத்துவிடம் வரம் கேட்கிறேன்! - சீனு ராமசாமி

|

சென்னை: இசைஞானி இளையராஜா - வைரமுத்து ஆகிய பெருங்கலைஞர்களிடம் வரம் கேட்கும் நிலையில் நான் இருக்கிறேன், என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

28 ஆண்டுகளுக்குப் பிறகு வைரமுத்துவின் பாடலை இசைஞானி இளையராஜா பாடப் போகிறார் என்று வெளியான செய்திகள் வெளியாகின.

இளையராஜா - வைரமுத்துவிடம் வரம் கேட்கிறேன்! - சீனு ராமசாமி

இந்த செய்திகளைத் தொடர்ந்து இளையராஜாவை நான் சந்தித்தேன். அவரும் வைரமுத்து பாடலைப் பாட ஒப்புக் கொண்டார் என சீனு ராமசாமி ஒரு முன்னணி ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்திருந்தார்.

இதுகுறித்து இசைஞானி இளையராஜா தரப்பில் கேட்டபோது, "சீனு ராமசாமி யாரென்றே இளையராஜாவுக்கு தெரியாது. அவரை இளையராஜா சந்திக்கவும் இல்லை," என்று கூறிவிட்டனர்.

அதன் பிறகு வேறொரு நாளிதழுக்குப் பேட்டியளித்த சீனு ராமசாமி, "இளையராஜாவை நான் சந்திக்கவே இல்லை. அந்த நாளிதழ் பொய்யாக செய்தி வெளியிட்டுவிட்டது," என்றார்.

இப்போது தனது பேஸ்புக் பக்கத்தில் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

கலையுலக நண்பர்களே! எனது திரைப்படங்களால் ஈர்க்கப்பட்ட தமிழ் நெஞ்சங்களே!

அனைவர்க்கும் வணக்கம்.

எனது "இடம் பொருள் ஏவல்" திரைப் படத்தில் தத்தெடுத்த மகனைப் பற்றிய உறவை மையப்படுத்தி ஒரு தாயின் பாடல் இடம்பெறுகிறது. இதை வைரமுத்து எழுத, யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார்.

இந்தப் பாடலை யாரைப் பாட வைக்கலாம் என்ற யோசனையில் என் ஆழ்மனதில் தோன்றியவர் இசைஞானி இளையராஜா அவர்கள். இதை இப்படத்தின் இசை அமைப்பாளர் யுவனிடமும், தயாரிப்பாளர் லிங்குசாமியிடமும் தெரியப்படுத்தினேன். யுவன் தன் அப்பாவிடம் நான் கேட்கிறேன் என்றார். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி.

தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற கள்ளிக்காட்டில் பொறந்த தாயே மாதிரியான ஒரு பாடலை இசைஞானி பாடினால் எப்படி இருக்கும்!

ஆனால் சில நண்பர்கள் இதனை வேறுமாதிரித் திரித்து எழுதி வருகின்றனர். இதைப் பகை முற்றுப்பெற்ற காலமாக நான் பார்க்கிறேன். இரண்டு பெருங் கலைஞர்களின் பெருந்தன்மை சம்மந்தப்பட்ட விஷயம் இது. நான் இருவரிடமும் வரம் கேட்கும் நிலையிலேயே இருக்கிறேன்.

"பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்!" - என்ற பாரதியின் வரிகளே என் நினைவுக்கு வருகின்றன. இணைத்து வைக்கும் கரங்களே, என்னை ஆசீர்வதியுங்கள்!

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், சீனு ராமசாமி மனதுக்குள் நினைத்த விஷயம் அந்த ஆங்கில நாளிதழுக்குத் தெரிந்து, அவர்கள் சீனு ராமசாமி பேட்டியை கற்பனையாக வெளியிட்டதுதான்.

அடேங்கப்பா.. மகா மார்க்கெட்டிங் ப்ளான்தான் போங்க!!

 

Post a Comment