சென்னை: நடிகர் கார்த்தி திடீரென மயங்கி விழுந்ததால், நேற்று மாலை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான இவர், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை கொண்டுள்ளார்.
30 நாட்களாக படப்பிடிப்பு
கடந்த 30 நாட்களாக அவர் கமுதியில் நடந்த ‘கொம்பன்' என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார். முத்தையா டைரக்டு செய்து வரும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்து வருகிறார். கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு படமாக்கி முடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கார்த்தி சென்னை திரும்பினார்.
திடீர் மயக்கம்
இந்நிலையில் நேற்று மாலையில் நடிகர் கார்த்தி, அவரது வீட்டில் இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
ஃபுட் பாய்சன்
அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு ஃபுட் பாய்சன் காரணமாகவே ஒவ்வாமை ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறினர். கார்த்திக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்துள்ளனர்.
இன்று வீடு திரும்பலாம்
கார்த்தி மிகவும் களைப்பாக இருந்ததால், அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்த்தி, இன்று வீடு திரும்புவார் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
Post a Comment