கோவை: கோவைக்கு வந்த இடத்தில் முதுகுவலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவுக்கு இன்று அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் தனது மணிவிழாவை கோவையில் விழா நடத்திக் கொண்டாடினார் வைரமுத்து. இதற்கான பணிகளில் தீவிரமாகவும் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர் சென்னை திரும்பினார். இந்த நிலையில் திருப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
மேலும் 2 நாட்களுக்கு முன்பு கோவையில் நடந்த லயன்ஸ் கிளப் நிகழ்ச்சிக்காக மீண்டும் கோவை வந்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென முதுகுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனைகள் நடத்தினர். சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து இன்று அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரமுத்துவை அவரது இரு மகன்களும், மருமகள்களும் கூடவே இருந்து கவனித்துக் கொள்கின்றனர்.
ஆபரேஷனுக்கு முன்பு வீடியோவில் உரை
முன்னதாக இன்று ஜெயகாந்தன் விழாவில் சென்னையில் வைரமுத்து பேசுவதாக இருந்தது. ஆனால் உடல் நல பாதிப்பு காரணமாக அதில் பங்கேற்க இயலாமல் போய் விட்டது. இருப்பினும் உறுதியளித்தபடி தனது பேச்சு இடம் பெற வேண்டும் என்ற உறுதியால், அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக தனது பேச்சை வீடியோவில் பதிவு செய்து கொடுத்தார் வைரமுத்து.
இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் வைரமுத்துவின் வீடியோ பேச்சு ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment