லிங்கா படத்திற்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

|

மதுரை: ரஜினிகாந்த நடித்துள்ள லிங்கா படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

மதுரை சின்ன சொக்கிகுளத்தைச் சேர்ந்தவர் ரவிரத்தினம். இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "முல்லைப் பெரியாறு அணை மற்றும் அணையைக்கட்டிய பென்னிகுயிக் வரலாறை பின்னணியாக கொண்டு "முல்லை வனம் 999" என்ற படத்தை இயக்கி வருகிறேன்.

லிங்கா படத்திற்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

அந்த கதையை திருடி "லிங்கா" படத்தை தயாரித்துள்ளனர். எனவே லிங்கா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். எனது கதையை திருடிய லிங்கா படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து படத்தின் நாயகனானா நடிகர் ரஜினிகாந்த் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், "லிங்கா படத்தின் வினியோகஸ்தர் உரிமையை பெற்றுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இது தவறானது. லிங்கா படத்தின் கதை, திரைக்கதையை பொன்குமரன் எழுதி உள்ளார். லிங்கா படத்தில் நான் நடித்துள்ளதைத் தவிர வேறு எந்த பங்களிப்பும் எனக்கு கிடையாது. விளம்பர நோக்கத்துக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில், லிங்கா பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில் "லிங்கா படத்தின் கதை திருடப்படவில்லை. லிங்கா படத்தின் கதையை பொன்.குமரன் எழுதி உள்ளார். திரைக்கதையை நான் எழுதி உள்ளேன். மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.

ரஜினியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து மனுதாரர் ரவிரத்தினம் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் "நடிகர் ரஜினிகாந்த் பதில் மனுவில் படத்தின் கதை திரைக்கதையை பொன்குமரன் எழுதியதாக கூறி உள்ளார். ஆனால் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கதையை பொன்குமரன் எழுதியதாகவும், திரைக்கதையை தான் எழுதியதாகவும் கூறி உள்ளார்.

இருவரின் பதில் மனுவிலும் முரண்பாடு உள்ளது. ரஜினியின் மகள் நடத்தி வரும் நிறுவனம் தான் லிங்கா படத்தின் வினியோக உரிமையை பெற்றுள்ளது. தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் மனுவை தாக்கல் செய்து இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறி இருப்பது சரியல்ல. அந்த நோக்கத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை" என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி எம்.வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் பீட்டர், ரமேஷ்குமார், வி.ரமேஷ் ஆகியோர் "முல்லைவனம் 999" கதையும் "லிங்கா" கதையும் ஒன்று தான். மனுதாரரின் கதை திருடப்பட்டுள்ளது. மனுதாரரின் கதையும், "லிங்கா" படக்கதையும் ஒன்று தானா என்பதை உண்மை அறியும் குழு மூலம் விசாரித்து போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்றனர்.

நடிகர் ரஜினிகாந்த், படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சஞ்சய்ராமசாமி, சண்முகராஜாசேதுபதி ஆகியோர் ‘மனுதாரர் கூறி உள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. அவர் தனது கதையை பதிவு செய்யவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் மனுதாரர் பதிப்புரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோர முடியாது. லிங்கா படத்தின் கதை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. லிங்கா படத்தின் கதை திருடப்படவில்லை. மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றனர்.

விசாரணையின் போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் மதுரை போலீஸ் கமிஷனரின் பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில் "மனுதாரரின் புகார் மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை" என்று கூறப்பட்டு இருந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

 

Post a Comment