கயல் விமர்சனம்

|

Rating:
3.0/5
எஸ் ஷங்கர்

நடிப்பு: சந்திரன், ஆனந்தி, தேவராஜ், வின்சென்ட்

ஒளிப்பதிவு: வெற்றிவேல் மகேந்திரன்

இசை: டி இமான்

தயாரிப்பு: எஸ்கேபி ஆர்டிஸ்ட் மதன் & ஜேம்ஸ்

இயக்கம்: பிரபு சாலமன்

வாழ்க்கையின் வெளிச்சத்தைத் தேடிச் செல்லும் சந்திரன், வின்சென்ட் ஆகிய இருவருக்கும் ஒரே கொள்கைதான். ஆறு மாதம் வேலை.. ஆறு மாதம் ஜாலியாக ஊர் சுற்றுவது எனபதுதான் அது.

கயல் விமர்சனம்

அப்படி ஊர்ஊராக சுற்றிக் கொண்டிருக்கும்போது, ஒரு முறை காதல் ஜோடிக்கு உதவப் போய், காதலனுடன் ஓடிய பெண்ணின் சித்தப்பா யோகி தேவராஜிடம் எக்கச்சக்கமாக மாட்டிக் கொள்கிறார்கள்.

அப்போது தேவராஜ் வீட்டில் வேலை செய்யும் ஆனந்தி ஓடிப்போன பெண்ணைப் பற்றி விசாரிக்க வருகிறாள். அவரைப் பார்த்ததுமே காதல் வந்துவிடுகிறது ஹீரோவுக்கு.

ஓடிப்போன பெண் விஷயத்தில் சந்திரனைக் கொன்றுவிட தேவராஜின் ஆட்கள் முயலும்போதுதான் அந்தப் பெண் திரும்ப வருகிறாள். தன் காதலுக்கும் சந்திரனுக்கும் சம்பந்தமில்லை என்கிறாள். உடனே சந்திரனை ஊரைவிட்டே அனுப்பி விடுகிறார்கள்.

கயல் விமர்சனம்

அவனும் நண்பனும் கன்னியாகுமரிக்குப் போகிறார்கள். அவன் நினைவாகவே வாடும் ஆனந்தி, ஒரு கட்டத்தில் சந்திரனைத் தேடி கன்னியாகுமரி போகிறாள். ஒன்று சேர்ந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.

பிரபு சாலமன் தனக்கென ஒரு பாணியை வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த கயலும் அப்படித்தான். ஆனாலும் கதை மாந்தர்களையும் நிகழ்வுகளையும் முடிந்தவரை யதார்த்தமாக காட்சிப்படுத்தியுள்ளார்.

முதல் பாதி ஓரளவு சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், இடைவேளைக்குப் பிந்தைய நிகழ்வுகள் ஒரே இடத்தில் முடங்கிப் போனதைப் போன்ற உணர்வு.

நாயகனாக வரும் சந்திரன் இயல்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். முதல் படத்திலேயே இந்த அளவு நடிப்பது பெரிய விஷயம்தான்.

கயல் விமர்சனம்

படத்தில் ரொம்ப பொருத்தமான வேடத்தில் நடித்திருப்பவர் தேவராஜ். மிக இயல்பான நடிப்பு. படம் பார்ப்பவர்கள் கடைசியில் ஏகத்துக்கும் திட்டிவிட்டுப் போவது இவரைத்தான். அது அவர் நடிப்புக்கான பாராட்டு.

ஆனந்தி பார்க்க பக்கத்து வீட்டிலிருக்கும் சிறு பெண்ணாக இருக்கிறார். அந்த வேடத்துக்கும் கச்சிதமாய் பொருந்துகிறார். கண்களின் வழியே பாவங்களை வெளிப்படுத்தும் கலை நன்றாகவே கைவருகிறது அவருக்கு.

நண்பனாக வரும் வின்சென்ட்டும் தேறிவிடுகிறார்.

காட்சிகள் ஒவ்வொன்றும் ஏன் அவ்வளவு நீள்கின்றன, ஏன் வளவளவென்று பாத்திரங்கள் பேசிக் கொண்டே இருக்கின்றன என்று தெரியவில்லை.

அதேபோல அந்த சுனாமி காட்சி இந்தக் கதைக்கு எந்த அளவு தேவை என்ற கேள்வியும் எழுகிறது. அதே நேரம் சுனாமியைக் காட்சிப்படுத்தியதிலும், அதற்கான ஒலித் தரத்திலும் குறையொன்றுமில்லை.

இமானின் இசையும், வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவும் படத்தின் பாதி குறைகளை மறக்கடிக்கின்றன.

அழகாக படம் எடுக்க வேண்டும் என நினைப்பிலேயே இருந்த இயக்குநர், அந்த அழகான படத்தை சுவாரஸ்யமாகத் தருவதில் சற்று சறுக்கியிருக்கிறார்!

 

Post a Comment