ரஜினிகாந்தைச் சந்திக்க, அவருடன் ஒரே ஒரு படமெடுத்துக் கொள்ள ஜப்பானிலிருந்தும், லண்டனிலிருந்தும் சென்னைக்கு வரும் ரசிகர்களைப் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் இங்கு சென்னையில் உள்ள ரஜினியின் தீவிர ரசிகர் ஒரு என்ன செய்தார் தெரியுமா... ரஜினி ஹாங்காங் செல்வதைக் கேள்விப்பட்டு, அதே விமானத்தில் குடும்பத்துக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து கூடவே போய் படமெடுத்துக் கொண்டு திரும்பியிருக்கிறார்.
அந்த ரசிகர் பெயர் சீனிவாசன் ஜெயசீலன். கத்தே பசிபிக் விமான நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
லிங்கா படத்துக்காக ரஜினி குழுவினரோடு ஹாங்காங் செல்லும் தகவல் கிடைத்ததும், முதலில் பயணிகள் பட்டியலைச் சோதித்து, அதில் ரஜினி பெயர் இருப்பதை உறுதி செய்ததுமே, தனக்கும் தன் குடும்பத்துக்கும் ஹாங்காங் வரை டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.
குறித்த தேதியில் ரஜினி சென்னை விமான நிலையத்துக்கு வர, அங்கிருந்து ரஜினியுடன் பயணத்திருக்கிறார். விமான நிலையத்தில் படக் குழுவினருக்கு சீனிவாசன் ஜெயசீலனும் உதவி செய்திருக்கிறார்.
அதற்காக நன்றி சொல்ல வந்த உதவி இயக்குநர் கார்த்திக்கிடம், ரஜினியைச் சந்திக்க உதவுமாறு கூற, அவரும் அறிமுகப்படுத்தினாராம்.
அந்த அனுபவத்தை இப்படி விவரிக்கிறார் சீனிவாசன்: "என்னைப் பார்த்ததும் கம்பீரமாக சிரித்தவர், " வாங்க வாங்க எப்படி இருக்கீங்க" என்றார். நான் என் குடும்பத்தினரும் அவரைப் பார்க்க விரும்புவதைக் கூறினேன். உடனே அவர்களை அழைத்துவரச் சொன்னார்.
என் மகனைப் பார்த்ததும் அவர் எழுந்து அவனை அமரவைத்தார். அந்தக் கணத்தை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து என் குழந்தைகளிடம் சிறிது நேரம் அவர் பேசிக்கொண்டிருந்தார். நாங்கள் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட பிறகு விமானத்தில் ஏறினோம்.
ஹாங்காங் சென்று இறங்கியவுடன், படப்பிடிப்பு குழுவினர் மக்காவ் புறப்பட்டுச் சென்றனர். அதற்கு முன் என்னைப் பார்த்த ரஜினிகாந்த், ‘நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு ‘உங்களோடு புகைப்படம் எடுக்கத்தான் நாங்கள் விமானத்தில் வந்தோம். உடனே சென்னை கிளம்புகிறோம்' என்றேன். அவர் நெகிழ்ந்து போய் எங்களிடம் இருந்து விடைபெற்றார். நாங்களும் ரஜினியை சந்தித்த மகிழ்ச்சியில் சென்னை திரும்பினோம்," என்றார்.
படம்: தி இந்து
Post a Comment