கைவிட்ட சினிமா கட்டிடம் கட்டப்போன கதாநாயகி!

|

கனவு தொழிற்சாலையான சினிமா எல்லோரையும் கடைசி வரை காப்பாற்றும் என்று சொல்ல முடியாது. சினிமா கைவிட்டாலும் இருக்கவே இருக்கிறது சீரியல் என்று சின்னத்திரைக்கு வந்து ஜொலிக்கும் நாயகிகள் இருக்கத்தான் செய்கின்றனர்.

அதுவும் கை கொடுக்கவில்லையா இருக்கவே இருக்கிறது. பியூட்டி பார்லர், பேஷன் ஜூவல்லரி ஷாப், ஜவுளிக்கடை என்று செட்டில் ஆகிவிடுவார்கள். சில நடிகைகளோ தொழிலதிபரைப் பார்த்து திருமணம் செய்து கொண்டு காணாமலே போய்விடுவார்கள். ஒருசிலர் அரசியலில் குதித்து அவ்வப்போது பிரசாரத்திற்கு வந்து போவார்கள்.

நம்முடைய நாயகியின் கதையோ வேறு. ஒளி ஓவியரின் படத்தில் வண்ண வண்ணமாய் அறிமுகமானார். அழகான நாயகன்... இரண்டு நாயகி என்ற அந்த படத்தில் நாயகியை மேக் அப் இல்லாமலேயே நடிக்க வைத்தார் ஒளி ஓவியரான இயக்குநர்.

ஒரு நடிகை இயக்குநருடனேயே செட்டில் ஆகிவிட்டார். சீரியலிலும் வந்து போனார். ஆனால் நம்முடைய நாயகியின் கதையோ வினோதமானது. சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து அக்கா, அண்ணி கதாபாத்திரம் மட்டுமே கிடைத்தது. அதனால் சீரியல் பக்கம் கரை ஒதுங்கினார். சின்னத்திரையிலும் சொல்லிக்கொள்ளும்படியாக வாய்ப்புகள் அமையவில்லை. அவரது பெயரில் சில நடிகைகள் வந்து போனார்கள்.

நம் நடிகையோ நல்ல பில்டராக பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். சும்மா ஏன் இருக்கவேண்டும்? கட்டிடம் கட்டி வித்தால் கையில் நாலு காசாவது பார்க்கலாம் என்று கணவர் கொடுத்த ஐடியாவை கேட்டு கட்டுமான தொழிலில் காலூன்றி விட்டாராம். சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் இவர் கட்டி வரும் கட்டிடங்கள் நடிகையின் பேர் சொல்கிறதாம். சின்னத்திரை நடிகை சங்கத்தின் தலைவிக்கு இவர்தான் கட்டிட காண்டிராக்டராம்.

 

Post a Comment