ஜோத்பூர்: அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில், அரசுத் தரப்பு சாட்சிகள் 5 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி, நடிகர் சல்மான் கான் தாக்கல் செய்த மனுவை ஜோத்பூர் அமர்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூருக்கு இந்திப் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக கடந்த 1998ஆம் ஆண்டு சென்றபோது, சக நடிகைகளுடன் போய் அரிய வகை சிங்காரா மான்களை சல்மான் கான் வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மான்களை வேட்டையாடியபோது, பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளுக்கான உரிமங்கள் காலாவதியானவை என்றும் அவருக்கு எதிராக வனத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்தது. இதுதொடர்பான வழக்கு ஜோத்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் ஏற்கெனவே விசாரணை முடிந்த அரசுத் தரப்பு சாட்சியங்கள் ஐந்துபேரை மீண்டும் குறுக்கு விசாரணை செய்ய மனு தாக்கல் செய்தார் சல்மான் கான்.
இதனை விசாரித்த ஜோத்பூர் அமர்வு நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமார் வியாஸ்,
"சல்மான் கானின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள சாட்சிகள் 5 பேரும், அரசுத் தரப்பு சாட்சிகள் ஆவர். அவர்களிடம் ஏற்கெனவே விசாரணை நிறைவடைந்து விட்டது. எனவே குறுக்கு விசாரணை தேவையில்லை," என்று உத்தரவிட்டார்.
ஏற்கெனவே மும்பையின் பாந்த்ரா பகுதியில் காரை வேகமாக ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில், சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனைக்கு மும்பை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து, அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இந்நிலையில், அரிய வகை மான்களை வேட்டையாடியது தொடர்பான வழக்கில் சல்மான்கானின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது அவருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.
இதுகுறித்து சல்மான் கானின் வழக்குரைஞர் எச்.எம். சாரஸ்வத் கூறுகையில், "எந்த அடிப்படையில், மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரமும் கிடைப்பதற்காக காத்திருக்கிறோம். இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் திட்டமும் உள்ளது. ஆனால், தீர்ப்பு முழுவதும் கிடைத்த பிறகே, அதுகுறித்து இறுதி முடிவு எடுப்போம்," என்றார் அவர்.
Post a Comment