உத்தம வில்லன் தாமதம்.. ரசிகர்கள் ஆவேசம்.. போராட்டம், சாலை மறியல்

|

சென்னை: கமல்ஹாசன் நடித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உத்தம வில்லன் படத்தை திரையீடு பைனான்சியர்களால் தடைபட்டுள்ளதற்கு கமல்ஹாசன் ரசிகர்கள் கடும் ஆட்சேபனையும், கோபமும் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் போராட்டமும் நடந்தன.

உத்தமவில்லன் இன்று காலை திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் ஹிட்டாகி விட்டன. டிரெய்லரும் ஹிட்டாகி விட்டது. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது.

Kamal fans upset over the delay in Uthama Villain release

இதன் காரணமாக இன்று காலையில் தியேட்டர்களில் மிகப் பெரிய அளவில் கூட்டம் திரண்டிருந்தது. ஆனால் ரசிகர்கள் காட்சி திரையிடப்படவில்லை. அது ரத்தானதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோல காலைக் காட்சியும் திரையிடப்படவில்லை.

இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தது. படத்தைத் திரையிடுவது தொடர்பாக பைனான்சியர்கள் பிரச்சினையைக் கிளப்பியதால்தான் படம் திரையீடு தள்ளிப் போயுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு கூறி வருகிறது.

இதுகுறித்து ரசிகர்கள் கூறுகையில், ஏன் கமல் படத்துக்கு இப்படி செய்கிறார்கள். முன்பே பேசி சரி செய்திருக்க வேண்டியதுதானே, படம் பார்க்க ஆவலுடன் வந்த ரசிகர்களை இப்படியா ஏமாற்றுவது என்று கேட்டனர்.

சென்னை, மதுரை உள்பட பல இடங்களில் படம் திரையிடப்படாத காரணத்தால் ரசிகர்கள் கோபத்துடன் காணப்பட்டனர். அவர்களில் சிலர் திரையரங்குகளில் கோபத்துடன் நடந்து கொண்டதால் போலீஸார் தலையிட வேண்டி வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திராவிலும் கூட காலைக் காட்சிகள் வெளியாகவில்லை. இது கமல்ஹாசனின் ஆயிரக்கணக்கான ரசிகர்களை, டிக்கெட் எடுத்துக் காத்திருந்தவர்களை பெரும் கோபத்துக்குள்ளாக்க விட்டது.

சென்னை ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் திரையரங்கு முன் ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல், திருச்சியிலும் உத்தம வில்லன் படத்தை காண்பதற்காக இன்று காலை மேரிஸ் திரையரங்கம் முன்பும் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால், படம் வெளியாகாததை அடுத்து, ரசிகர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. ரம்பா தியேட்டர் முன்பும் காலையில் இருந்தே ரசிகர்கள் குவிந்தனர். படம் தாமதமாவதால் அவர்களில் சிலர் கலாட்டாவில் குதித்தனர். இதனால் போலீஸார் விரைந்து வந்தனர். 2 பேரைப் பிடித்துச் சென்றனர்.

 

Post a Comment