சென்னை: உத்தம வில்லனைத் தொடர்ந்து கமல் நடிக்கும் புதிய படம் தூங்கா வனம். கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்கும் இந்தப் படத்தில் முதன் முறையாக கமலுடன் ஜோடி போடுகிறார் நடிகை த்ரிஷா.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப் பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.நேற்று இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார் நடிகர் கமல்.
ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பை படத்தின் போஸ்டர்கள் பெற்றுள்ளன.ஒரு பிரபல செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் 80 சதவீதத்திற்கும் அதிகமான ரசிகர்கள் போஸ்டர்கள் நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர்.
கமல் மிகவும் இளமையாக தோன்றும் இந்த போஸ்டரில் ஒரு கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு மற்றொரு துப்பாக்கியை இடுப்பில் சொருகிக் கொண்டு வருகிறார்.
மற்றொரு போஸ்டரில் ஒரு பெண்ணை கட்டிப் பிடித்துக் கொண்டு ஒரு கையால் அந்தப் பெண்ணை துப்பாக்கியால் சுடுவது போன்றும் உள்ளது.இவற்றைப் பார்க்கும் போது மீண்டும் ஒரு சிகப்பு ரோஜாகளாக இந்தப் படம் மலருமா என்பது தெரியவில்லை.
இதற்கிடையில் கமல் இந்தப் படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக வருகிறார் என்றும் கூறுகிறார்கள்.போலீசாக வருகிறாரா இல்லை, கொலைகாரனாக வரப் போகிறாரா அல்லது இரண்டு வேடங்களில் தோன்றப் போகிறாரா என்பது தெரியவில்லை.
கதை என்ன என்று தெரியும்வரை காத்திருக்க வேண்டியதுதான்..
Post a Comment