பாட்ஷா 2 படத்தில் அஜீத் நடிக்கப் போவதாக இணைய தளங்கள், நாளிதழ்களில் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
ஆனால் இவை அனைத்தும் பொய்யானவை என்று இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
ரஜினி நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ஆர் எம் வீரப்பன் தயாரிப்பில் 1995-ல் வெளியாகி வசூலில் தனி வரலாறு படைத்த படம் பாட்ஷா. 365 நாட்களுக்கு மேல் ஓடி சாதனைப் படைத்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பல முறை பேசப்பட்டு, பின் கைவிடப்பட்டது.
இதன் இரண்டாம் பாகத்தில் நடிக்குமாறு ரஜினியிடம் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பேசியபோது, "பாட்ஷா என்ற படமே போதும். அதை ரீமேக் செய்வது, இரண்டாம் பாகம் எடுப்பதெல்லாம் சரியாக வராது. எனவே அந்த எண்ணம் வேண்டாம்," என்று கூறிவிட்டார்.
இந்த நிலையில் பாட்ஷா இரண்டாம் பாக கதையை அஜீத்தை சந்தித்து சுரேஷ் கிருஷ்ணா கூறியதாகவும், அந்தக் கதை பிடித்துப் போனதால் அஜீத் நடிக்க சம்மதித்து விட்டதாகவும் செய்திகள் பரவின. மேலும் இந்தப் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, ஆர் எம் வீரப்பனே தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் கேட்டபோது, "அஜீத்தை இயக்கும் வாய்ப்பு வந்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன். ஆனால் நான் சமீபத்தில் அவரைச் சந்திக்கவும் இல்லை, பாட்ஷா 2 குறித்து பேசவும் இல்லை. அதுபற்றி வரும் செய்திகள் பொய்யானவை," என்றார்.
Post a Comment