தமிழ்த் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு: விண்ணப்பித்த 5 வாரங்களில் முடிவு... உச்சநீதிமன்றம் உத்தரவு

|

சென்னை: தமிழ்த் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு தொடர்பாக விண்ணப்பித்த 5 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் ஏழாம் அறிவு திரைப்படத்தைத் தயாரித்தார். படம் யூ சான்றிதழ் பெற்றபோதும் கூட அந்தப் படத்திற்கு வரிவிலக்கு அளிக்க தமிழக அரசு மறுத்து விட்டது.

Tax Exemption - Tamil movies

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் உதயநிதி. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசு தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது போன்று தெரியவில்லை என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தனது ரெட்ஜெயண்ட் மூவிஸ் சார்பாக அப்பீல் செய்தார் உதயநிதி ஸ்டாலின். நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசிற்கு ஒரு உத்தரவை பிறப்பித்தனர்.

அதில், திரைப்படத் தயாரிப்பாளர் வரி விலக்கு கோரி விண்ணப்பம் தாக்கல் செய்த 2 வாரங்களுக்குள் பார்வையிடும் குழுவினர் படத்தை திரையிடும் தேதியை அரசு சார்பில் தயாரிப்பாளருக்கு தெரிவிக்கவேண்டும்.

அந்த தேதியில் இருந்து அடுத்த 2 வாரங்களுக்குள் தயாரிப்பாளர் பார்வையிடும் குழுவுக்கு படத்தை திரையிடுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். பின்னர் படத்தை பார்த்த தேதியில் இருந்து சம்பந்தப்பட்ட படத்துக்கு வரிவிலக்கு அளிப்பதா? இல்லையா? என்பதை ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு தயாரிப்பாளருக்கு அறிவிக்கவேண்டும்.

மொத்தத்தில், ஒரு படத்திற்கு வரிவிலக்கு அளிப்பதா இல்லையா என்பதை தயாரிப்பாளர் வரிவிலக்கு கோரி விண்ணப்பித்த 5 வாரங்களுக்குள் தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

 

Post a Comment