பிரபல நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாகனாக அறிமுகமாகிறார். அந்தப் படத்துக்கு அதாகப்பட்டது மகாஜனங்களே என தலைப்பிட்டுள்ளனர்.
படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இன்பசேகர்.
கதை குறித்து இயக்குநர் கூறுகையில், "நாம எவ்வளவுதான் புத்திசாலித்தனமாக கணக்குப் போட்டாலும், அதே பிரச்சனைக்கு வாழ்க்கை வேற ஒரு கணக்கு போட்டு வைத்திருக்கும். பின்பு நமக்கு நடக்கும் நிகழ்வுகளை பார்த்து சிரிப்பதா இல்லை அழுவதா என்று புரியாத நிலையில் நாம் தள்ளப்படுவோம்.
இந்த கதைக் கருவை மையமாக வைத்து விறுவிறுப்பும், நகைச்சுவையும் கலந்து உருவாகியிருக்கும் படம்தான் 'அதாகப்பட்டது மகாஜனங்களே'.
வித்தியாசமான தலைப்புக்கான காரணம் படத்தின் இறுதிக் காட்சியில் தெரிய வரும்," என்றார்.
தெலுங்கில் பிரபல கதாநாயகியான ரேஷ்மா ரத்தோர் இத்திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். கருணாகரன் நகைச்சுவை கலந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் படம் முழுக்க வருகிறார். மற்றும் ஆடுகளம் நரேன், பாண்டியராஜன், மனோபாலா புதுமுக நடிகர் தயாளன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டி இமான் இசையமைக்க, பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கிறார். அட்டகத்தி மற்றும் குக்கூ படங்களின் ஒளிப்பதிவாளர் பிகே வர்மா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
சில்வர் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பாக எஸ் ரமேஷ்குமார் தயாரித்திருக்கிறார்.
Post a Comment