ஊரெல்லாம் பாகுபலி பற்றிய பேச்சாகவே இருக்கிறது. 'என்னய்யா படத்தை இப்படி சடக்குன்னு முடிச்சிட்டாரே.. அடுத்த பாகம் எப்போ வரும்..? இதே மாதிரி ரெண்டு மூணு வருசம் காத்திருக்கணுமோ..' என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அவ்வளவு நாளெல்லாம் காத்திருக்கத் தேவையில்லை என்று கூறும் வகையில், இப்போதே பாகுபலி 2ம் பாக வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளார் இயக்குநர் ராஜமவுலி.
வரும் ஜனவரி மாதமே பாகுபலி இரண்டாம் பாகத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார். இன்னும் இரண்டு மாதங்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இறுதிப் பணிகளைத் தொடங்கப் போகிறாராம்.
இரண்டாம் பாகப் பணிகள் இவ்வளவு சீக்கிரம் முடியக் காரணம், ஏற்கெனவே முக்கியமான பிரமாண்ட காட்சிகளையெல்லாம் எடுத்து விட்டாராம் ராஜமவுலி. இனி பேட்ச் ஒர்க் மாதிரி சில காட்சிகள் எடுத்தால் போதுமாம். கிராபிக்ஸ் காட்சிகளில் பெருமளவு முடிந்துவிட்டதாம்.
முதல் பாகத்தை 3 டியில் தர முயற்சி செய்தார் ராஜமவுலி. ஆனால் முடியவில்லை. எனவே இரண்டாம் பாகத்தை முழுக்க 3 டியில் வெளியிட முடிவு செய்துள்ளாராம்.
பொங்கலுக்கு அஜீத் படம், கமல் படமெல்லாம் வரப்போவதாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த சூழலில் பாகுபலி 2 வரப் போவதை உறுதிப்படுத்தியிருப்பபது கோலிவுட்டை திகைக்க வைத்துள்ளது. காரணம் பாகுபலி முதல் பாகம் வரலாறு காணாத வரவேற்புடன் தமிழில் ஓடிக் கொண்டுள்ளது. இரண்டாம் பாகத்துக்கு ஏக எதிர்ப்பார்ப்பு உள்ளதால், பொங்கலுக்கு வேறு படங்களுக்கு போதிய திரையரங்குகள் கிடைப்பது கடினம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
Post a Comment