9/13/2011 4:46:33 PM
நடிகை விசித்ராவின் தந்தை, சென்னை அருகே பண்ணை வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். பிரபல கவர்ச்சி நடிகை விசித்ரா. வேளச்சேரியில் வசிக்கிறார். இவரது தந்தை வில்லியம் (70). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தாய் வசந்தா (65). விசித்ராவுக்கு சொந்தமான பண்ணை வீடு ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்லம்பட்டிடையில் உள்ளது. இது திருவள்ளூர் மற்றும் ஆந்திர மாநில எல்லையில் உள்ளது.
இந்த கிராமத்தில்தான் வில்லியம் சிறு வயது முதல் வசித்து வந்தார். விசித்ரா நடிகையான பிறகுதான் பெற்றோர் சென்னைக்கு வந்தனர். வாரத்தின் இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாளின் போது வில்லியம், வசந்தா ஆகியோர் பண்ணை வீட்டில் ஓய்வெடுப்பார்கள். விசித்ராவும் வந்து செல்வதாக தெரிகிறது. அதேபோல இரு நாட்களுக்கு முன் கணவன், மனைவி இருவரும் பண்ணை வீட்டுக்கு சென்றனர். தோட்டத்தில் உள்ள வீட்டில் கணவன், மனைவி இருவரும் தங்கினர். நேற்று இரவு அவர்கள் இருவருமே மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிகாலையில் பண்ணை வீட்டுக்கு 2 பேர் சென்று, கதவை தட்டியுள்ளனர்.
வில்லியம் கதவை திறந்துள்ளார். முகமூடி அணிந்து இருந்த அவர்கள், Ôநீ மட்டும் நல்லா இருக்கணுமாÕ என்று கூறி வில்லியமை சரமாரியாக வெட்டினர். ரத்தவெள்ளத்தில் விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கணவரை மீட்க போராடிய வசந்தாவை மர்ம நபர்கள் பிடித்து தள்ளினர். அதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. அதிர்ச்சியில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் மர்ம நபர்கள், வசந்தா அணிந்திருந்த செயின், கம்மல், மோதிரம் உள்பட 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பினர்.
இதுபற்றி தகவல் பரவியதும் பண்ணை வீட்டில் மக்கள் கூடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சுங்குவார்சத்திரம் போலீசார், பண்ணை வீட்டுக்கு விரைந்தனர். வசந்தாவை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். வில்லியம் உடலை பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். ரியல் எஸ்டேட் தொழில் தகராறு அல்லது ஆந்திராவை சேர்ந்த தெரிந்தவர்கள் இந்த கொள்ளை மற்றும் கொலைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Post a Comment