'போங்கோவின் தேசம்' என்ற நாடகத்தை தமிழகம் முழுவதும் நடத்த இருப்பதாக சண்முகராஜன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது; பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் சில கேரக்டர்களில் நடிக்கும்போது நம்மையறியாமலேயே அதிக ஈடுபாடு வந்துவிடுவது உண்டு. 'கிருஷ்ணவேணி பஞ்சாலை' படத்தில் அப்படியொரு கேரக்டரில் நடித்துள்ளேன். இதே போல விக்ரம் நடிக்கும், 'கரிகாலன்' படத்தில் சோழமன்னனின் சித்தப்பாவாக நடிக்கிறேன். சினிமாவில் வில்லன் நடிகர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகச் சொல்கிறார்கள். வில்லனாக நடித்தாலும் குணசித்திர வேடத்தைதான் எல்லாரும் விரும்புவதால் வில்லனுக்கு பஞ்சம் என்றும் சொல்லலாம். வில்லன் வேடத்தில் ஒரே பார்மெட்டுக்குள்தான் நடிக்க வேண்டியிருக்கிறது. அதை தாண்டி நடிக்க, சிறந்த கதைகள் வேண்டும். குணசித்திர வேடங்களில் நடிக்கும்போது திறமைகளை காண்பிக்க வாய்ப்பிருக்கிறது. சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தாலும் நாடகம்தான் எனது உயிர். நாடகங்கள் இயக்கி நடித்து வருகிறேன். இப்போது 'போங்கோவின் தேசம்' என்ற நாடகத்தை டெல்லியில் நடத்தினோம். சமகால அரசியலை பேசும் இந்நாடகத்தை விரைவில் தமிழகம் முழுவதும் நடத்த இருக்கிறோம். இவ்வாறு சண்முகராஜன் கூறினார்.
Post a Comment