மகாரஷ்டிரா விவசாயிகள் கடனைத் தீர்க்க ரூ.30 லட்சம் கொடுத்த அமிதாப் பச்சன்

|

Amitabh Bachchan Offers Financial Help To Debt Ridden
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 114 விவசாயிகளின் கடனை அடைக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ரூ.30 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து வருகின்றனர். இந்நிலையில் விதர்பா பகுதியில் உள்ள வர்தா மாவட்டத்தில் உள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த 114 விவசாயிகளின் கடன்களை அடைக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ரூ.30 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். வர்தாவில் நடந்த விழாவில் அந்த காசோலைகளை உள்ளூர் எம்.பி. தத்தா மேகே விவசாயிகளிடம் வழங்கினார்.

அந்த விவசாயிகளுக்கு யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் வர்தா மாவட்ட கூட்டுறவு வங்கிகள் ஆகியவை கடன் வழங்கியுள்ளன. இந்த காசோலை வழங்கும் விழாவில் 90 விவசாயிகள் கலந்து கொண்டனர். விழாவுக்கு வராத 24 விவசாயிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று காசோலைகள் வழங்கப்பட உள்ளன.

விதர்பா பகுதி விவசாயிகளின் கடன் தொகையை செலுத்த காசோலைகள் வழங்கியது போன்று தங்களுக்கும் வழங்குமாறு உத்தர பிரதேச மாநில பண்டல்கண்ட் விவசாயிகள் அமிதாப் பச்சனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

விதர்பா பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நேரத்தில் அமிதாப் பச்சன் விவசாயிகளுக்கு பணம் கொடுத்து உதவியது அவர்களுக்கு பெருமகிழ்ச்சியாக உள்ளது. அமிதாபின் இந்த செயலை விதர்பா ஜன் அன்டோலன் சமிதி என்னும் என்.ஜி.ஓ. வரவேற்றுள்ளது.
Close
 
 

Post a Comment