20 சண்டை, எக்கச்சக்க கூலிப்படையினருடன் தமிழுக்கு வரும் கூலி!

|

Kannada Gooli Comes Tamil 20

கன்னடத்தில் வெளியாகி ஹிட் ஆன கூலி என்ற படம் தமிழுக்கு வருகிறது. அந்தக் காலத்தில் படம் முழுக்க பாட்டு இருக்கும் என்பார்கள். அதேபோல இந்த கூலி படத்தில் படம் நிறைய சண்டைக் காட்சிகள்தானாம். கிட்டத்தட்ட 20 சண்டைக் காட்சிகள் இப்படத்தில் இருக்கிறதாம். சுதீப் நடித்த இப்படத்தை கொருக்குப்பேட்டை கூலி என்ற பெயரில் டப் செய்து கொண்டு வருகின்றனர்.

கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சுதீப், தமிழில் ஹிட் ஆன படங்களின் கன்னட ரீமேக்கில் நடித்துப் பிரபலமானவர். சேது, சிங்கம் என அவர் நடிக்காத தமிழ் ஹிட் ரீமேக் படங்களே இல்லை.

அதேசமயம், ரத்த சரித்திரம் படம் மூலம் நேரடித் தமிழ்ப் படத்திலும் சுதீப் நடித்துள்ளார். இப்போது அவரது படம் ஒன்று கன்னடத்திலிருந்து தமிழுக்கு டப் ஆகி வருகிறது. அப்படத்தின் பெயர்தான் கூலி.

2008ம் ஆண்டு வெளியான இப்படம், ஒரு கூலிப்படையின் கதையாகும். கூலிக்கு ஆளைத் தூக்குவது, போட்டுத் தள்ளுவது, கையைக் காலை எடுப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபடும் நாயகனும், அவனது காதலியும் சந்திக்கும் சவால்கள் குறித்ததுதான் படம்.

படத்தில் ஏகப்பட்ட சண்டைக் காட்சிகள், கிட்டத்தட்ட 20 சண்டைக் காட்சிகள் இருக்கிறதாம். இதுதான் அப்படத்தை அன்று ஹிட்டாக உதவியது. அதேபோல கூலிப்படையினரின் மோதல்களுக்கும் பஞ்சமில்லையாம்.

நடிகை மமதா மோகன்தாஸ், சுதீப்புக்கு ஜோடியாக நடித்திருந்தார். கிஷோர் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இப்படம் விரைவில் கொருக்குப்பேட்டை கூலி என்ற பெயரில் தமிழ்த் திரைக்கு வருகிறது.

நான் ஈ படத்தில் சுதீப்பும் நடித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். இது அவருக்கு தமிழில் 2வது படமாகும்.

 

Post a Comment