பிரபல பாலிவுட் நடிகர் தாரா சிங் மும்பையில் உள்ள தனது வீட்டில் இன்று காலை 7.30 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
மல்யுத்த வீரராக இருந்து பாலிவுட் நடிகரானவர் தாரா சிங்(84). கடந்த 7ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டதுடன், செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்தது. கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் உடல் நிலை தேறுவது கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததையுடுத்து நேற்று மாலை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று பிற்பகல் 2 மணிக்கு தகனம் செய்யப்படுகிறது.
தாரா சிங் மரண செய்தி கேட்டு பாலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
அவர் கடந்த 2007ம் ஆண்டு வெளிவந்த ஜப் வி மெட் படத்தில் கரீனா கபூரின் தாத்தாவாக நடித்தது தான் அவருடைய கடைசி படம். ராமாயணம் தொடரில் ஹனுமானாக நடித்து புகழ் பெற்றவர் தாரா சிங். அவர் கடந்த 1928ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி அமிர்தசரசில் உள்ள தர்மூசக் கிராமத்தில் பிறந்தார். அவர் காமன்வெல்த் போட்டிகளில் மல்யுத்தத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment