ஜி காமராஜ் இயக்கத்தில் தமிழ், கன்னடம், மலையாளத்தில் தயாராகும் படம் யாருக்குத் தெரியும். சஞ்சனா சிங், கலாபவன் மணி, ஜெய்பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீதருக்கு இதுதான் முதல்படம். ஏற்கெனவே தெரிந்தவர் என்ற முறையில் ஸ்ரீதருக்கு உதவி செய்வதாகக் கூறிக் கொண்டு வந்து சேர்ந்தாராம் ஏ கிருஷ்ணமூர்த்தி. இவர் நான் கடவுள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். பல படங்களில் வடிவேலுவுடன் நடித்திருக்கிறார்.
கிருஷ்ணமூர்த்தியின் மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தன் மூலம் பணம் பட்டுவாடா செய்தால் ஏமாற்ற மாட்டார்கள் என்று தயாரிப்பாளரிடம் கூறி பணம் பெற்றுள்ளார் கிருஷ்ணமூர்த்தி.
ஆனால் பலருக்கு பேசியபடி சம்பளத்தை அவர் கொடுக்கவில்லை. துணை நடிகர்கள், இசையமைப்பாளர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பேசிய சம்பளம் ஒன்றாகவும், வவுச்சரில் கொடுத்த சம்பளம் வேறாகவும் இருந்ததாம்.
இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ரகசியமாக விசாரித்ததில் கிருஷ்ணமூர்த்தி பணம் கையாடியது தெரிய வந்துள்ளது. மேலும் தன் வீட்டில் வேலை பார்ப்பவர்கள் பெயரிலெல்லாம் காசோலை பெற்று, பணத்தைக் கையாடியதாகக் கூறப்படுகிறது. இதுபோல கிட்டத்தட்ட ரூ 20 லட்சம் வரை அவர் மோசடி செய்ததது தெரிய வந்ததாம்.
கிருஷ்ணமூர்த்தியை விசாரிக்க அழைத்தபோது, தனக்கு ரூ 15 லட்சம் தராவிட்டால் படத்தை வெளியிட முடியாமல் செய்துவிடுவே்ன் என்று அவர் குடித்துவிட்டு வந்து தயாரிப்பாளரை மிரட்டினாராம்.
மேலும், தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம் மற்றும் பெப்சியிலும் ஸ்ரீதர் மீது புகார் கொடுத்துள்ளார்.
சும்மா உதவியாக இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு வந்தவர் ரூ 20 லட்சம் ஏமாற்றியதோடு, மேலும் ரூ 15 லட்சம் தரவேண்டுமென்று கேட்டு மிரட்டுகிறார் என தனது புகாரில் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ஸ்ரீதர்.
இந்தப் புகாரை திநகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் விசாரிக்கிறார்.
இந்த வழக்கு குறித்து தயாரிப்பாளர் ஸ்ரீதரிடம் கேட்டபோது, வழக்கு விசாரணையில் இருப்பதால் எதுவும் பேசவிரும்பவில்லை என்றார். கிருஷ்ணமூர்த்தையைத் தொடர்பு கொண்டபோது அவர் தொடர்புக்கே வரவில்லை.
Post a Comment